தூத்துக்குடியில் பாலித்தீன் விழிப்புணர்வு: பள்ளிக்கூட மாணவிகள் சேகரித்த சாக்லேட், பிஸ்கட் உறைகள்


தூத்துக்குடியில் பாலித்தீன் விழிப்புணர்வு: பள்ளிக்கூட மாணவிகள் சேகரித்த சாக்லேட், பிஸ்கட் உறைகள்
x
தினத்தந்தி 6 July 2018 3:00 AM IST (Updated: 6 July 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பாலித்தீன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிக்கூட மாணவிகள் சேகரித்த சாக்லேட், பிஸ்கட் உறைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பாலித்தீன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிக்கூட மாணவிகள் சேகரித்த சாக்லேட், பிஸ்கட் உறைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பாலித்தீன் ஒழிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பாலித்தீன் பைகளை ஒழிப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாணவ–மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் பயன்படுத்தும் சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களில் பொதிந்து வைக்கப்பட்டு இருக்கும் பாலித்தீன் உறைகளை சேகரித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பு மாணவிகள் 360 பேர் கடந்த 20–6–18 முதல் 4–7–18 வரை தினமும் தாங்கள் பயன்படுத்திய பிஸ்கட், சாக்லேட் உள்ளிட்ட உணவு பொருட்களின் உறைகளை கொண்டு வந்து பள்ளிக்கூடத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட பெட்டியில் சேகரித்தனர்.

ஒப்படைப்பு

இந்த பாலித்தீன் உறைகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை பள்ளிக்கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தலைமை தாங்கினார். என்ஜினீயர் ரூபன்சுரேஷ் பொன்னையா, மாநகர நல அலுவலர் வினோத்ராஜா, உதவி செயற்பொறியாளர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாணவிகள் தாங்கள் சேகரித்த 5 தனியார் நிறுவனங்களின் சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களின் 20 ஆயிரத்து 244 உறைகளை ஆணையாளரிடம் ஒப்படைத்தனர். அப்போது ஒரு கடிதத்தையும் கொடுத்தனர். அதில், உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு, உங்கள் சாக்லேட், பிஸ்கட் தரமாக உள்ளது. ஆனால் உங்கள் பாலித்தீன் கவர் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது. ஆகையால் அதனை சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத வகையில் மாற்றுங்கள் என்று எழுதி இருந்தனர்.

இதனை பெற்றுக் கொண்ட ஆணையாளர், ‘மாணவிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் ஒரு கடிதத்தையும் இணைத்து, பாலித்தீன் உறைகள் சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ–மாணவிகள், ஆசிரியைகள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டிலேயே முதல் முறையாக...

பின்னர் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் நிருபர்களிடம் கூறும் போது, ‘தூத்துக்குடி மாநகராட்சியில் பாலித்தீன் உபயோகத்தை தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவ–மாணவிகள் பயன்படுத்தும் உணவு பொருட்களில் மூடப்பட்டு இருக்கும் பாலித்தீன் உறைகள் சேகரிக்கப்பட்டன. தற்போது ஒரு பள்ளியில் சேகரித்த உறைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதே போன்று மற்ற பள்ளிகளிலும் சேகரித்து வருகிறோம். அதனையும் விரைவில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். தனியார் உணவு நிறுவனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற வேண்டும். இந்தியாவிலேயே தூத்துக்குடி மாநகராட்சியில்தான் இந்த திட்டத்தை முதன் முதலில் செய்து உள்ளோம். மாநகராட்சி சார்பில் விளம்பர பலகைகள் வைக்கும் போது, பிளக்ஸ் போர்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இனிமேல் அது தவிர்க்கப்பட்டு துணியால் ஆன விளம்பர பலகைகள் மட்டுமே வைக்கப்படும்’ என்று கூறினார்.


Next Story