கலபுரகியில், வீட்டுக்கு தீவைத்ததில் தம்பதி உடல் கருகி சாவு; 2 குழந்தைகள் கவலைக்கிடம் உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு


கலபுரகியில், வீட்டுக்கு தீவைத்ததில் தம்பதி உடல் கருகி சாவு; 2 குழந்தைகள் கவலைக்கிடம் உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 July 2018 3:15 AM IST (Updated: 6 July 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகியில் வீட்டுக்கு தீவைத்ததில் தம்பதி உடல் கருகி பலியானார்கள். உடல் கருகிய 2 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெங்களூரு,

கலபுரகியில் வீட்டுக்கு தீவைத்ததில் தம்பதி உடல் கருகி பலியானார்கள். உடல் கருகிய 2 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தொடர்புடைய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டில் தீப்பிடித்து எரிந்தது

கலபுரகி (மாவட்டம்) டவுன் ராகவேந்திரா நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சையத் அக்பர் (வயது 42). இவரது மனைவி சகஜாஜ் பேகம் (36). இந்த தம்பதிக்கு சானியா பேகம் என்ற மகளும், சையத் யாசின் என்ற மகனும் உள்ளனர். கடந்த 3–ந் தேதி இரவு தனது மனைவி, குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு சையத் அக்பர் படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் அவரது வீட்டில் திடீரென்று தீப்பிடித்தது.

உடனே தூங்கி கொண்டிருந்த சையத் அக்பர், அவரது மனைவி சகஜாஜ் பேகம் திடுக்கிட்டு விழித்தார்கள். பின்னர் தங்களது குழந்தைகளுடன் 2 பேரும் வீட்டிற்குள் இருந்து வெளியே தப்பித்துவர முயன்றார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதற்கிடையில், வீடு முழுவதும் தீ பரவி எரிந்தது.

தம்பதி சாவு

மேலும் சையத் அக்பர், அவரது மனைவி, குழந்தைகள் மீதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அவர்கள் சத்தம் போட்டு கூச்சலிட்டார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் சையத் அக்பர் உள்பட 4 பேரின் உடல்களிலும் பிடித்த தீயை அணைத்தார்கள். அதன்பிறகு, உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய 4 பேரையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் சையத் அக்பர், அவரது மனைவி சகஜாஜ் பேகம் ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். குழந்தைகள் சானியா பேகம், சையத் யாசின் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவினருக்கு வலைவீச்சு

முன்னதாக இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று ராகவேந்திராநகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதலில் சையத் அக்பர் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையில், சையத் அக்பர் வீட்டிற்கு, அவரது சகோதரி ஹீனா பேகத்தின் கணவர் முஸ்தபா சலீம் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து, 4 பேரையும் உயிருடன் எரித்துக் கொல்ல முயன்றது தெரியவந்தது. ஹீனா பேகத்துடன் அடிக்கடி முஸ்தபா சலீம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால் தனது சகோதரியுடன் சண்டை போடாமல் வாழும்படி கூறி முஸ்தபா சலீமை, சையத் அக்பர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முஸ்தபா சலீம், சையத் அக்பர் வீட்டிற்கு தீவைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ராகவேந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முஸ்தபா சலீமை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story