ஸ்டெர்லைட்டும், அரசும் நடத்தும் நாடகத்தின் உச்சக்கட்ட காட்சி பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கிறது வைகோ பேட்டி


ஸ்டெர்லைட்டும், அரசும் நடத்தும் நாடகத்தின் உச்சக்கட்ட காட்சி பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கிறது வைகோ பேட்டி
x
தினத்தந்தி 7 July 2018 2:30 AM IST (Updated: 7 July 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட்டும், அரசும் நடத்தும் நாடகத்தின் உச்சக்கட்ட காட்சி பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கிறது என்று வைகோ கூறினார்.

தூத்துக்குடி,

ஸ்டெர்லைட்டும், அரசும் நடத்தும் நாடகத்தின் உச்சக்கட்ட காட்சி பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கிறது என்று வைகோ கூறினார்.

வைகோ பேட்டி

தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜராவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மதியம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி மாநகர் மக்களின் உடல்நலனை பாதுகாக்கவும், மீனவர், விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும் கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இடைவிடாத போராட்டங்களை நானும், என் தோழர்களும் முன்னின்று எந்த சமரசத்துக்கும் இடமின்றி நடத்தி வருகிறோம். தற்போது உச்சக்கட்ட காட்சி நடக்கிறது.

கடந்த மே மாதம் 22–ந் தேதிக்கு பிறகு ஏற்பட்ட மக்கள் கொதிநிலையால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற எண்ணம் இன்றைய அ.தி.மு.க. அரசுக்கு துளி அளவும் கிடையாது. அரசு கொள்கை முடிவாக இதனை சட்டமன்றத்தில் வைக்கவில்லை.

ரகசிய ஒப்பந்தம்

தற்போது பசுமை தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் நிறுவனம் அரசு பிறப்பித்த ஆணையை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்து உள்ளது. அந்த நிறுவனம் ஆலையை இயக்குவதற்கு இடைக்கால தடையை கேட்கிறது. அப்படி கொடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது அரசும், ஸ்டெர்லைட் நிறுவனமும் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம்.

நான் பொறுப்பு இல்லாமல் பேசவில்லை. இந்த பிரச்சினையில் 22 வருடமாக மூழ்கி போனதால் சொல்கிறேன். கோர்ட்டு சொல்லும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்பார்கள். அந்த தைரியத்தில்தான் இந்த ஆலையை இயக்குவோம் என்று அனில்அகர்வால் கூறுகிறார். ஒப்பந்த தொழிலாளர்கள் மனு கொடுக்கிறார்கள். நாங்கள் அந்த ஊழியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை. அவர்களுக்கு உரிய நஷ்டஈடு கொடுக்க கோர்ட்டில் வலியுறுத்தி உள்ளோம்.

பயந்து விடமாட்டோம்

இந்த காற்று மண்டலத்தை ஸ்டெர்லைட் ஆலை மாசுபடுத்தி உள்ளது. அரசுக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று உண்மையிலேயே உணர்வு இருந்தால், தற்போது ஏன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புதிதாக வழக்கு போட்டு மிரட்டுகிறீர்கள். துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்தால்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து யாரும் போராட முன்வரமாட்டார்கள் என்று சர்வாதிகாரிகள் முடிவு எடுத்து உள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனத்துக்காக ஒரு கூலிப்படையை போன்று தமிழக அரசு போலீஸ் துறையை ஏவி விட்டு உள்ளது என்று கடுமையான குற்றச்சாட்டை வைக்கிறேன்.

யாரும் போராட வரக்கூடாது என்று ஒவ்வொரு அமைப்பின் மீதும் வழக்கு பதிவு செய்கிறார்கள். ஸ்டெர்லைட் நிறுவனம் கோர்ட்டில் உத்தரவு பெற்று வந்தாலும், நாங்கள் மக்களை திரட்டுவோம். ஆனால் வன்முறையில் போகமாட்டோம். துப்பாக்கி சூடு நடத்திவிட்டதால் நாங்கள் பயந்து விடமாட்டோம். ஸ்டெர்லைட்டும், அரசும் சேர்ந்து நடத்தும் நாடகத்தின் உச்சக்கட்ட காட்சி பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் நடக்கிறது. அந்த வழக்கில் நானும் மனு தாக்கல் செய்ய உள்ளேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.


Next Story