ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது


ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 July 2018 4:45 AM IST (Updated: 8 July 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் கோவிலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி, சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீரங்கம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் காந்திகண்ணன்(வயது 33). இவருக்கும், 16 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் கடந்த 5-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெறுவதாக சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்துவதற்குள், திருமணம் முடிந்து இருவீட்டாரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பெண்ணின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது பெண்ணுக்கு 19 வயது முடிந்து விட்டதாகவும், அதற்கான சான்றிதழ்கள் உள்ளதாகவும் கூறினர். ஆனால் மணமகன் கோவிலில் கொடுத்த சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அவை போலி என தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் மணப்பெண் படித்த பள்ளியில் இருந்து அவரது கல்விச்சான்றிதழ்களை பெற்று பார்த்தபோது, அவருக்கு 16 வயது தான் ஆகி உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா, மணமகன் காந்திகண்ணன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், மணப்பெண்ணான சிறுமியை அவரது உறவினர் ஒருவர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். போலீசார் சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே கோவிலில் திருமணம் நடந்தபோது, மணமகன் காந்திகண்ணனிடம் கோவில் ஊழியர்கள் அசல் சான்றிதழ்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர் தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், தலைமைச்செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறி உள்ளார்.

இதேபோல் மணப்பெண்ணின் தாயாரிடமும் அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் காந்திகண்ணன் நேற்று ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்பதும், அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் 2008-ம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்ததும், அதன்பிறகு சென்னையில் தண்ணீர் விற்பனை செய்யும் கம்பெனி நடத்தி வருவதும் தெரியவந்தது. சிறுமியின் தந்தை மரணம் அடைந்து விட்டதால் அவர்களது குடும்பம் கடனில் சிக்கி தவித்துள்ளது.

அப்போது உறவினர் ஒருவர் மூலம் அந்த குடும்பத்துக்கு காந்திகண்ணன் பழக்கமாகி உள்ளார். நாளடைவில் சிறுமியின் குடும்பத்துக்கு ஏற்பட்ட கடன்தொகையை அவர் அடைத்துள்ளார். ஒரு கட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கொடுங்கள் அல்லது உங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள் என்று அவர் வற்புறுத்தியதால், இந்த திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து காந்திகண்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story