சென்னைக்கு வரும் அமித்ஷாவை சந்திக்க ரங்கசாமி திட்டம்


சென்னைக்கு வரும் அமித்ஷாவை சந்திக்க ரங்கசாமி திட்டம்
x
தினத்தந்தி 9 July 2018 4:45 AM IST (Updated: 9 July 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு இன்று வரும் அமித்ஷாவை சந்திக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்த பணிகளை பாரதீய ஜனதா கட்சி செய்து வருகிறது. இதற்காக தொகுதிதோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் கூட்டணி கட்சிகளுடனும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில நிர்வாகிகளை சந்தித்து பேச பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். அவரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமியும் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். ஏற்கனவே அமித்ஷா புதுவை வந்தபோது அவரை ரங்கசாமி சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் ஆட்சிமாற்றம் தொடர்பாக பேசியதாக கூறப்பட்டது. ஆனால் அதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களுக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் வழங்கப்பட்டது. அதன்பின்னரும் ரங்கசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். ஆனால் அப்போது அவர்கள் என்ன பேசினார்கள்? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் அமித்ஷாவை ரங்கசாமி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. 

Next Story