நெல்லியாளம் நகராட்சி துப்புரவு பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, கலெக்டர் அலுவலகத்தில் மனு


நெல்லியாளம் நகராட்சி துப்புரவு பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 10 July 2018 3:45 AM IST (Updated: 10 July 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

நெல்லியாளம் நகராட்சி துப்புரவு பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி, பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

நெல்லியாளம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் 50 பேர் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வருகிறோம். நகராட்சி கமி‌ஷனர், அதிகாரிகள் கூறும் பணிகளை எந்த குறைபாடுகளும் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் துப்புரவு பணியாளர்களில் குறிப்பிட்ட சிலரை எந்தவித காரணமும் இன்றி பணி நீக்கம் செய்ய போவதாக ஒப்பந்ததாரர் கடிதம் கொடுத்து உள்ளார். நாங்கள் அரசுக்கு எதிராகவோ அல்லது நகராட்சிக்கு எதிராகவோ போராட்டம் ஏதும் நடத்தவில்லை.

நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அந்த சம்பளத்தை வைத்து தான் குடும்பம் நடத்தி வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்டால் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஒப்பந்ததாரர் கடிதம் கொடுத்து கூறி இருப்பது, எங்களது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. கணவனை இழந்த பெண்கள், ஆதிவாசிகளும் பணியில் இருக்கின்றனர். எங்களை உரிய காரணம் இல்லாமல் உள்நோக்கத்துடன் ஒப்பந்ததாரர் பணியில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. மேலும் வேண்டும் என்றே மாத சம்பளத்தை தராமல் இழுத்தடித்து வருகின்றனர்.

எனவே, பணியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க துப்புரவு பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story