ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 143 பேர் கைது


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் பெண்கள் உள்பட 143 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 4:30 AM IST (Updated: 10 July 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 23 பெண்கள் உள்பட 143 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அன்றாட பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை விளக்கி புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபடபோவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலையில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகத்தில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் பொது அலுவலக வளாகத்தில் கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து பொது அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, பழைய பஸ் நிலையம் முன்பு உள்ள மதுரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், வாசுதேவன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 143 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை கைது செய்து, புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story