கடன் தள்ளுபடி விவகாரம்: விவசாயிகளை சந்தித்து பேச முதல்-மந்திரி குமாரசாமி மறுப்பு


கடன் தள்ளுபடி விவகாரம்: விவசாயிகளை சந்தித்து பேச முதல்-மந்திரி குமாரசாமி மறுப்பு
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 7:59 PM GMT)

பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

கடன் தள்ளுபடி விவகாரம் குறித்து பேசுவதற்கு விவசாயிகளை சந்திக்க முதல்-மந்திரி குமாரசாமி மறுத்துவிட்டார். இதனால் விவசாயிகள் விதான சவுதாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் விவசாயிகள் கடன் ரூ.34 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்வதாக கடந்த 5-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். ஆனால் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக குமாரசாமி, தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாயிகள் கடன் ரூ.53 ஆயிரம் கோடியும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார். இதனால் விவசாயிகள் கடன் ரூ.53 ஆயிரம் கோடியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் மற்றும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் ரூ.34 ஆயிரம் கோடி கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதால், குறிப்பிட்ட விவசாயிகள் மட்டுமே பயன் அடைந்திருப்பதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். இதையடுத்து, விவசாயிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் சுதந்திர பூங்காவுக்கு வந்து கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரம் தொடர்பாக நேற்று விதானசவுதாவில் விவசாய சங்கங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 20 பேருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்து இருந்தார். ஆனால் திடீரென்று விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை சந்தித்து பேச முதல்-மந்திரி குமாரசாமி மறுத்து விட்டார்.

மேலும் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால், விவசாயிகளை சந்திக்க முதல்-மந்திரியால் முடியவில்லை என்ற தகவல் வெளியானது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர் விவசாயிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விதானசவுதாவை முற்றுகையிட சுதந்திர பூங்காவில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

விதானசவுதாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதால் முன் எச்சரிக்கையாக மவுரியா சர்க்கிள் அருகே வைத்து விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது முதல்-மந்திரி குமாரசாமிக்கு எதிராக விவசாயிகள் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் சில விவசாயிகள் சாலையில் படுத்து உருண்டார்கள். மேலும் போலீஸ் பாதுகாப்பையும் மீறி விதானசவுதாவை முற்றுகையிடுவதற்காக விவசாயிகள் சென்றனர். இதனால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகளை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர்களை அங்கிருந்து பஸ்களில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி குமாரசாமி, விவசாயிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக கூறி விட்டு, தற்போது ரூ.34 ஆயிரம் கோடியை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளார். அவரின் இந்த முடிவால் 17 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயன் அடைவார்கள். ரூ.34 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்ததிலும் ஏராளமான சரத்துகளை முதல்-மந்திரி குமாரசாமி விதித்துள்ளார். கூட்டணி ஆட்சி என்பதால் விவசாயிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யாமல், படிப்படியாக தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளை ஏமாற்ற குமாரசாமி நினைக்கிறார்.

விவசாயிகளை சந்தித்து பேசுவதை விட முக்கிய வேலை இருப்பதாக கூறி, எங்களை சந்திக்க மறுத்து விட்டார். விவசாயிகள் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும். விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தாலும், சிறைக்குள்ளேயும் போராட்டம் நடத்துவோம். விவசாயிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய மறுப்பதால் நாளை (அதாவது இன்று) மாநிலம் முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story