மீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை வெட்டி ரூ.4½லட்சம் கொள்ளை


மீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை வெட்டி ரூ.4½லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 10 July 2018 3:30 AM IST (Updated: 10 July 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த ரூ.4½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் (வயது 45) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவர் மது விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 600–ஐ பையில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து பொன்னேரிக்கு செல்வதற்காக அவர் நடந்து சென்றார்.

அத்திப்பட்டு புதுநகர் அரசு பள்ளி அருகே வந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 மர்மநபர்கள் திடீரென தாமோதரனை சுற்றி வளைத்தனர். பின்னர் தாமோதரனை அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரிடம் இருந்த ரூ.4½ லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story