மாவட்ட செய்திகள்

8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அனுமதியின்றி போராட்டம் + "||" + 8 way to protest the Green road project: Communist Party of India

8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அனுமதியின்றி போராட்டம்

8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அனுமதியின்றி போராட்டம்
8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,

சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போலீசாரின் அனுமதியின்றி 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் உதயக்குமார், ஜோதிலட்சுமி, சேதுமாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க விவசாய நிலங்களை அபகரிக்க நினைக்கும் தமிழக அரசு நடவடிக்கையை கண்டித்தும், இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கைது செய்யக்கூடாது, அடக்குமுறையை ஏவக்கூடாது, இயற்கை வளங்களை அழிக்க கூடாது, போலீசை வைத்து மிரட்டக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் போலீசார் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இந்த போராட்டத்தில் 7 பெண்கள் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகி கோபி என்பவர் போராட்டங்களை செல்போனில் படம் எடுத்துக்கொண்டு இருந்தார். அவரை செல்போனில் போராட்டத்தை எடுக்கக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். அப்போது அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோபியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விவசாயிகள் விளை நிலங்களின் வழியாக சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க உள்ளது. மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க தமிழக அரசு விவசாயிகளை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது.

குறைந்தபட்சம் விவசாயிகளின் கருத்தை கேட்டு தமிழக அரசு செயல்பட வேண்டுமென வலியுறுத்தி போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இடதுசாரியினர் மீது காவல்துறை பிணையில் வெளிவரமுடியாத பொய் வழக்குகளை தொடுத்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 107 பேரை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றனர்.