கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சாலை மறியல் 120 பேர் கைது


கிருஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சாலை மறியல் 120 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2018 4:30 AM IST (Updated: 10 July 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் காமராஜ், பணி மேற்பார்வையாளர் சங்க மாவட்ட செயலாளர் திருவேங்கடம் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்கள்.

இதில் பிற சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வெங்கடேசன், தேவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாஸ்கர் ஆகியோர் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் உடனே நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் இணை செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதாக 23 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை பழையபேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். 

Next Story