நீதிமன்ற கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வக்கீல்கள் சாலைமறியல் 52 பேர் கைது


நீதிமன்ற கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வக்கீல்கள் சாலைமறியல் 52 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 9:31 PM GMT)

நீதிமன்ற கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சீர்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி,

சீர்காழியில் உள்ள புதிய பஸ் நிலையம் எதிரே ரூ.5 கோடியே 50 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், இந்த கட்டிட பணிகள் முழுமையாக முடிவு பெறாததால், நீதிமன்ற கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சீர்காழி வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் கடந்த 25-ந் தேதியில் இருந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வக்கீல்கள் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே வக்கீல்கள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் மணிவண்ணன், மூத்த வக்கீல்கள் சந்திரமோகன், ரெங்கராஜ், சாமிநாதன், சுந்தரய்யா உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் பொதுப்பணித்துறையின் கட்டிட பிரிவினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் 52 பேரை கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story