புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை அகற்றக்கோரி 3 கிராம மக்கள் சாலை மறியல்


புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை அகற்றக்கோரி 3 கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 July 2018 4:30 AM IST (Updated: 10 July 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பணிகொண்டான்விடுதி மற்றும் வெட்டுவாக்கோட்டை ஆகிய 2 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கீழஊரணிபுரம் மற்றும் மேலஊரணிபுரம் எல்லையில் மதுபான கடைகள் திறப்பதற்கு அந்த பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரிகளிடம் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானக்கடை திறக்க தடை கேட்டு நீதிமன்றத்திலும், கிராம மக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ஊரணிபுரம் கல்லணைக்கால்வாய் அலிவலம் பிரிவு வாய்க்கால் அருகில் ஒரு மதுக்கடையும், அதே கல்லணைக்கால்வாய் கரையில் சற்று தொலைவில் மற்றொரு மதுக்கடையும் டாஸ்மாக் அதிகாரிகளால் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் ஒரு ஊரில் இரண்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு கிராம மக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் இருப்பதால் மதுபாட்டில்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களால் விவசாய பணிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், மேலும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் சென்றுவரக்கூடிய முக்கிய சாலையின் ஓரமாக மதுக்கடை திறக்கப்பட்டு இருப்பது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி கீழஊரணிபுரம், மேலஊரணிபுரம், சிவவிடுதி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை ஊரணிபுரம் கல்லணைக்கால்வாய் பாலம் அருகில் சாலையின் குறுக்கே அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதில் மேலஊரணிபுரம் கோவிந்தராசு, பணிகொண்டான்விடுதி ஊராட்சி முன்னாள் தலைவர் கண்ணப்பன், திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க செயலாளர் சின்னத்துரை, அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சிவமுருகேசன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மதுக்கடை திறக்கப்பட்டுள்ள வழியே அன்றாடம் பள்ளிக்கு செல்லும் மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பள்ளி சீருடையுடன் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவிகள் உள்ளிட்ட மறியலில் ஈடுபட்டவர்கள் திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனே மூடவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வந்த ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் மற்றும் மாவட்ட உயர்அதிகாரிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடுவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே மறியலை கைவிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அறிவுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்டு கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். இதனை தொடர்ந்து இதுதொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டல டாஸ்மாக் மேலாளர் திருஞானம் உள்ளிட்ட பல்வேறு துறையின் உயர் அதிகாரிகளும், கிராம மக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிதாக திறக்கப்பட்ட இரண்டு மதுக்கடைகளையும் ஒரு வார காலத்திற்குள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் எழுத்துபூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் அங்கியிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக செங்கிப்பட்டி-பட்டுக்கோட்டை சாலையில் நேற்று காலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story