அரியலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் 138 பேர் கைது


அரியலூர் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் 138 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2018 10:45 PM GMT (Updated: 9 July 2018 9:32 PM GMT)

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 138 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

ஊராட்சி செயலர்களுக்கு பதிவுரு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவது, விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பல மாவட்டங்களில் எவ்வித விளக்கமும் கோராமல் ஊழியர்களை பணியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும்.

காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தனி நபர் இல்ல கழிவறை கட்டுவதற்கு ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தி ஊதியத்தில் ரூ.60 பிடித்தம் செய்ய வேண்டும். கணினி உதவியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும். கணினி இயக்குனர்களுக்கு 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் படி, திட்ட தொழிலாளிகளின் தினக்கூலி அடிப்படையில் ஊதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3-ந் தேதி முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக முக்கிய சாலைகள் வழியாக அரியலூர் பஸ் நிலையம்முன்பு வந்தனர். பின்னர் அங்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 55 பேரை கைது செய்து அங்கு உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் மாலையில் விடுவித்தனர். மறியலில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பஞ்சாபிகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மரியதாஸ், துணைத் தலைவர் தயாளன் ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நேற்று குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் திடீரென்று சாலைக்கு ஓடினர். பின்னர் குழுவாக அவர்கள் பிரிந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களில் சிலர் சாலையில் படுத்து விட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. அப்போது போராட்டக்காரர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலை கை விடுமாறும், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர்.

இதனை மீறி போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மறியலை தொடர்ந்து நடத்தி கொண்டிருந்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட 13 பெண்கள் உள்பட 83 பேரை போலீசார் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story