மாவட்ட செய்திகள்

4-வது நாளாக மழை கொட்டுவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது - மும்பை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு + "||" + Normal life has been struck by the 4th day of rain - the people of Mumbai are stuck in floods

4-வது நாளாக மழை கொட்டுவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது - மும்பை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

4-வது நாளாக மழை கொட்டுவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது - மும்பை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு
மராட்டியத்தில் 4-வது நாளாக கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக மும்பை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். சுற்றுப்புற மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நேற்று 4-வது நாளாக நீடித்தது. மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு உள்ளது.


இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நகர பகுதிகள் மற்றும் கிராமங்களில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டனர். சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. குடிசை பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. குறிப்பாக தாராவி நாயக் நகரில் உள்ள 200 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் தூங்க முடியாமல் நின்றவாரே முழு இரவையும் கழித்தனர். மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்தனர்.

மும்பையின் தாழ்வான பகுதிகளான தாதர் இந்துமாதா, கிங்சர்க்கிள், மலாடு, அந்தேரி மிலன் சப்வே உள்ளிட்ட இடங்களில் முட்டளவுக்கு மேல் வெள்ளம் தேங்கியது. பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, டோம்பிவிலி ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மாட்டுங்கா- சயான் இடையே தண்டவாளங்களை மூழ்கடித்தபடி மழைநீர் கரை புரண்டு ஓடியது. தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ரெயில்கள் ஆமை வேகத்திலேயே இயக்கப் பட்டன. மத்திய- மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக இயக்கப்பட்டன. தொடர் மழையால் மின்சார ரெயில்களில் குறைந்த அளவிலேயே கூட்டம் காணப்பட்டது.

துறைமுக வழித்தடத்தில் உள்ள சான்ட்ஹர்ஸ்ட் ரெயில் நிலையத்தில் நேற்று காலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மதிய நேரத்தில் தாதர் ரெயில் நிலையம் அருகே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த நீண்டதூர ரெயில்கள் தாதர் அருகே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர். சில நீண்ட தூர ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக மும்பையில் பெஸ்ட் பஸ் இயக்கத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

தானே, வசாய், நாலச்சோப்ரா, விரார் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளத்தினால் ஆறுகளாக காட்சி அளித்தன. வசாய் மிட்டாநகரை வெள்ளம் சூழ்ந்து அந்த பகுதி தீவாக மாறி உள்ளது.

இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் 300 பேர் வெளியில் வர முடியாமல் வெள்ளத்திற்கு மத்தியில் வீடுகளில் தவித்து வருகின்றனர். அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் மிதவையில் விரைந்தனர். மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த பல வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மும்பையில் நேற்று காலையிலேயே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் வந்துவிட்டனர். ஆனால் காலை 11 மணியளவில் தான் விடுமுறை அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு வந்திருந்த மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பை, தானே, நவிமும்பை நகரங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. வசாய் பகுதியில் உள்ள உஸ்காவ், பெல்கார், பபட்கின்ட் ஆகிய 3 அணைகள் நிரம்பின.

இதுபோல மும்பைக்கு தண்ணீர் வழங்கும் துல்சி ஏரியும் நேற்று நிரம்பியது. காலை 7.30 மணியில் இருந்து அந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு துல்சி அணை ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி நிரம்பியது. ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே நிரம்பி இருப்பது மும்பைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மும்பை பெருநகரத்துக்கு தண்ணீர் சப்ளை செய்யும் மற்ற ஏரிகளும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பால்கர் மாவட்டம் தகானுவில் 35.4 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை பொழிவு இதுதான் என கூறப்படுகிறது.

மும்பை கொலபாவில் 17.6 செ.மீ., சாந்தாகுருசில் 12.2 செ.மீ., தானேயில் 14.1 செ.மீ., அலிபாக்கில் 9.1 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இன்னும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.