சாலையோரம் பல ஆண்டுகளாக குடியிருந்த 12 குடும்பத்தினர் தங்களது வீடுகளை காலி செய்தனர்


சாலையோரம் பல ஆண்டுகளாக குடியிருந்த 12 குடும்பத்தினர் தங்களது வீடுகளை காலி செய்தனர்
x
தினத்தந்தி 10 July 2018 11:00 PM GMT (Updated: 10 July 2018 5:00 PM GMT)

சாலையோரம் பல ஆண்டுகளாக குடியிருந்த 12 குடும்பத்தினர், அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக தங்களது வீடுகளை காலி செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே ஆவின் பொது மேலாளர் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் முன்பு சாலையோரம் 12 குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் அலுவலக வளாகத்தில் ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வதற்கான மையம் கட்டப்பட்டுள்ளது. இம்மையத்திற்கு நுழைவு வாயில் அமைக்கப்பட இருக்கும் பகுதியில் தான் குடிசை வீடுகள் உள்ளன.

இதனால் அந்த வீடுகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆவின் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் பல ஆண்டுகளாக இருக்கும் எங்களை திடீரென அப்புறப்படுத்தினால் நாங்கள் எங்கே செல்வோம் என்று 12 குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு பிள்ளையார்பட்டியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இடம் ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது.


மேலும் வீடுகளை நீங்களாக காலி செய்யவில்லை என்றால் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து தள்ளப்படும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து 12 குடும்பத்தினரும் தாங்களாகவே முன் வந்து குடிசைகளை அப்புறப்படுத்தியதுடன், தேவையான பொருட்களை எல்லாம் அள்ளிக் கொண்டு சென்றனர். களிமண்ணால் ஆன சுவரை பொக்லின் எந்திரம் மூலம் இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Next Story