ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுப்பது எப்படி? பல்வேறு தரப்பினர் கருத்து
ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுப்பது எப்படி? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 432 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவ்வகை நிலங்களில் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் உள்ளது. 1,800–ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை அடர்ந்த வனமாக இருந்த கூடலூர் பகுதி ஆங்கிலேயர் காலத்தில் முன்னேற்றம் பெறத்தொடங்கியது. நாளடைவில் மக்கள் குடியேற்றம் காரணமாக ஊர்கள் உருவாகின.
சமீபகாலமாக காட்டு யானைகளால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள், விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக காட்டு யானைகளுக்கு போதிய பசுந்தீவனங்கள் வனத்தில் கிடைப்பது இல்லை. மேலும் அதன் வழித்தடங்களை ஆக்கிரமிப்பது, மின்வேலிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊருக்குள் நுழைவதாக கூறப்படுகிறது.
ஒரு காட்டு யானைக்கு சராசரியாக 250 கிலோ பசுந்தழைகள் தினமும் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு ஏற்ப வனத்தில் உணவு கிடைக்கிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது பலாப்பழ சீசன் நிலவுவதால் வனத்தில் கிடைக்காத பட்சத்தில் காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. மேலும், குடியிருப்புகள், விவசாய நிலங்களில் உள்ள பலா, கொய்யா, மா, வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களையும் தின்று சேதப்படுத்தி விடுகிறது.
இதனை தடுக்க முயலும் போது மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலும் மனிதர்கள் கொல்லப்படுகின்றனர். சில இடங்களில் காட்டு யானைகள் தாக்கப்பட்டு உயிர் இழக்கிறது. ஆண்டுதோறும் மனித–வனவிலங்குகள் மோதலால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. கூடலூர்–முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில் தொரப்பள்ளி பஜார் உள்ளது. இதேபோல் புத்தூர்வயல், குனில், ஏச்சம்வயல் உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்குள் கடந்த 2 ஆண்டுகளாக காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.
இதனால் காட்டு யானைகள் வருகையை கட்டுப்படுத்தக்கோரி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சில நாட்கள் மட்டும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதன்பின்னர் வழக்கம்போல் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதேபோல் முதுமலை வனத்தில் இருந்து 3 காட்டு யானைகள் இரவு 7 மணி தொடங்கி 11 மணிக்குள் தினமும் வெளியேறி தொரப்பள்ளி பஜார் வழியாக ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை தொடருகிறது.
கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி காந்தி நகர், சூண்டி, ஆரோட்டுப்பாறை, பாரதி நகர், பார்வுட் பகுதிகளில் 3 வயது குட்டியுடன் கூடிய காட்டு யானைகள் முகாமிட்டு இரவில் கடைகளை உடைத்து பருப்பு, அரிசி, உப்பு உள்ளிட்ட பொருட்களை தின்று வருகிறது. வனத்தில் பசுந்தீவனத்தை தேடி திரிய வேண்டிய காட்டு யானைகள் வியாபாரிகளின் கடைகளை உடைத்து விதவிதமான பொருட்களை தின்று பழகிவிட்டன. வனத்துறையினர் இரவு பகலாக விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் காட்டு யானைகள் ஊருக்குள் இருக்கவே விரும்புகிறது. குறிப்பாக கடைகளை உடைக்கும் குட்டி யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ஓவேலி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கூடலூர் மட்டுமின்றி பந்தலூர் தாலுகா பகுதியிலும் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுப்பது எப்படி? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து கூடலூர் தொரப்பள்ளியை சேர்ந்த விவசாயி சுனீல் கூறியதாவது:–
காட்டு யானை மனிதர்களை தாக்கி கொன்றால் மட்டுமே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். தொரப்பள்ளி பகுதியில் தினமும் 3 காட்டு யானைகள் வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் 1 ஆண்டாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதுமலை கரையோரம் அகழி ஆழமாக வெட்டி மின்வேலிகள் பொருத்த வேண்டும். எனது நிலத்தில் பயிரிட்டு உள்ள விவசாய பயிர்களை பாதுகாக்க மின்வேலி பொருத்தி வைத்து உள்ளேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வனத்தில் காட்டு யானைகளுக்கு தேவையான உணவு இல்லை. வாழை, பலா உள்ளிட்ட பயிர்களை தின்று பழகிய காட்டு யானைகள் வனத்தில் இருப்பது இல்லை.
கோடை காலத்தில் வனத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் வனத்துறையினர் தொட்டிகள் கட்டி அதில் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இதனை காட்டு யானைகள் குடித்து தாகத்தை தணிக்கிறது. இதேபோல் சீசன் காலத்தில் விளையும் பலா, கொய்யா, மா உள்ளிட்ட பழங்களை வனத்துறையினர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். பின்னர் வனத்தில் உள்ள குடிநீர் தொட்டிகள் அருகே பலாப்பழங்களை வனத்துறையினர் வைக்க வேண்டும். இதன் மூலம் காட்டு யானைகள் வனத்தில் முகாமிட்டு பழங்களை சாப்பிடும். மேலும் அதன் மூலம் வனத்தில் பலா மரங்களும் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஓவேலி விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:– வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு விருப்பமான பசுந்தீவனங்கள் கிடைப்பது இல்லை. கூடலூர் பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்து வருகிறது. இதற்கு ஏற்ப வனப்பகுதியில் பழ மரங்கள், மூங்கில்கள், புற்களை வளர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பசுந்தீவனங்கள் சரிவர கிடைக்காமல் காட்டு யானைகள் விவசாய நிலங்களை தேடி ஊருக்குள் வருகிறது.
பெருந்தோட்டங்களில் போடப்பட்டு உள்ள மின்வேலிகளை உடனடியாக வனத்துறையினர் அகற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே காட்டு யானைகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதியில் உள்ள பலா, மா மரங்களை அகற்ற வேண்டும் என வனத்துறையினர் கூறுவது ஏற்புடையது அல்ல. மேலும் வனப்பகுதியில் நீர்நிலைகளை அதிகம் உருவாக்க வேண்டும். இதனால் கோடை காலத்தில் தண்ணீரை தேடி அவைகள் ஊருக்குள் வராது. எனவே சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரகருதி இயற்கை பாதுகாப்பு அமைப்பு தலைவரும், கால்நடை டாக்டருமான சுகுமாறன் கூறியதாவது:– யானைகள் கூட்டு குடும்பமாக கூட்டமாக வாழக்கூடியவை. இக்கூட்டத்தின் வழிகாட்டுதலாக மேட்ரியாக் என அழைக்கப்படும் குடும்பத்தலைவியாக பெண் காட்டு யானை இருக்கும். இது வயது மூப்பை அடைந்தால் மற்றொரு யானை குடும்பத்தலைவியாக இருந்து தனது குடும்பத்தை பாதுகாக்கும். ஒவ்வொரு காலக்கட்டங்களில் காணப்படும் பருவ நிலைக்கு ஏற்ப இடம் பெயர்ந்து வாழும். பூமிக்கடியில் உள்ள உப்பு போன்ற தாதுப்படிவங்களை கண்டறியும் திறன் பெற்றது காட்டு யானைகள். புற்கள், மூங்கில் உள்ளிட்ட பசுந்தீவனங்கள் காட்டு யானைகளின் முக்கிய உணவாக உள்ளது. இதுதவிர பழங்களையும் சாப்பிடும்.
தினமும் 20 முதல் 40 கி.மீட்டர் தூரம் வரை காட்டு யானைகள் உணவுக்காக நடந்து செல்லும் தன்மை உடையவை. வனங்களின் பரப்பளவு மற்றும் வாழ்விடம் குறைதலால் காட்டு யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. கூடலூர், நடுவட்டம், முதுமலை வனத்தில் லண்டானா, ரெபிடோரியா, பார்த்தீனியம் உள்ளிட்ட வெளிநாட்டு தாவரங்களின் ஆக்கிரமிப்பால் காட்டு யானைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைப்பது இல்லை. வனத்தில் பசுந்தீவனங்களை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்தில் பசுந்தீவனங்களை குறிப்பிட்ட காலம் வரை வனத்துறையினரே பாதுகாப்புடன் வளர்த்து காட்டு யானைகள் சாப்பிட அனுமதிக்கலாம். உணவு கிடைக்காத பட்சத்தில் மட்டுமே காட்டு யானைகள் மனிதர்கள் வாழும் ஊருக்குள் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.