மாவட்ட செய்திகள்

திருத்தங்கல் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது + "||" + 5 people arrested in the murder case

திருத்தங்கல் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

திருத்தங்கல் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
திருத்தங்கலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், பழிக்குப்பழியாக நடந்தது அம்பலமாகி உள்ளது.

சிவகாசி,

திருத்தங்கல் பழைய சாட்சியாபுரம் ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சுள்ளான் என்ற சதீஸ்குமார்(வயது 29). இவர் புத்தகம் பைண்டிங் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் கீழத்திருத்தங்கல் முத்து மாரியம்மன் காலனி பகுதியில் சதீஸ்குமார் சென்றுகொண்டிருந்த போது, அவரை வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அவர் மீது ஒரு கல்லை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் ஆகியோரும் விசாரணையை முடுக்கிவிட்டனர். சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், திருத்தங்கலை சேர்ந்த முனியசாமி என்ற பொசுங்கன், அந்தோணிராஜ், மருதுபாண்டி, முனியசாமி என்ற முனியப்பன், மாரீஸ்வரன் என்ற வண்டு மாரீஸ்வரன் ஆகிய 5 பேர் சேர்ந்து சதீஸ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைதுசெய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கூறும்போது, அந்தோணிராஜ் மகன் முனியசாமி என்ற சாம்பாருக்கும், பேட்டை கார்த்திக் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக 2 பிரிவினர் இடையே அடிக்கடி தகராறு, அடி–தடி நடந்துவந்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டை கார்த்திக், கொலை செய்யப்பட்ட சதீஸ்குமார் மற்றும் 2 பேர் சிவகாசி–விருதுநகர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முனியசாமிக்கும், பேட்டை கார்த்திக்குக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பேட்டை கார்த்திக்கும், அவருடன் இருந்தவர்களும் சாம்பார் முனியசாமி, பழனிகுமார் மகன் முனியசாமி ஆகியோரை கத்தியால் வெட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து முதல்நாள் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பழிக்கு பழியாக சதீஸ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறினர்.