வாடிப்பட்டி–புதுத்தாமரைப்பட்டி ரிங்ரோடு அமைப்பதை எதிர்த்து வழக்கு, மதுரை ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
வாடிப்பட்டி–புதுத்தாமரைப்பட்டி இடையே ரிங் ரோடு அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை ஐகோர்ட்டில் பென்னிகுவிக் இருபோக பாசன விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை வாடிப்பட்டி தாதம்பட்டியில் இருந்து புதுத்தாமரைப்பட்டி வரை ரிங்ரோடு அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.750 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரிங் ரோடு அமைப்பதால் 540 ஏக்கர் பரப்பளவில் நஞ்சை, புஞ்சை நிலங்கள், கிணறுகள், கண்மாய்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படும். இந்த ரிங்ரோடு திட்டத்தால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் வேலை இழப்பார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
தமிழக அரசின் ரிங்ரோடு திட்டத்தின்படி ஏற்கனவே இருக்கும் சாலையை அகலப்படுத்த வெறும் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தினால் போதுமானது.
இத்திட்டத்தை அமல்படுத்தினால் முல்லைப்பெரியாறு பாசன பகுதிகளான வாடிப்பட்டி முதல் கள்ளந்திரி வரையில் இருபோக விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். மேலும் நகரி, குலமங்கலம், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், அரும்பனூர் வழியாக ரிங்ரோடு அமையும் பொருட்டு விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். அல்லது முல்லைப்பெரியாறு பாசன கால்வாயின் வடபுறம் வழியாக மாற்று வழிச்சாலை அமைக்க வேண்டும்.
எனவே வாடிப்பட்டி–புதுத்தாமரைப்பட்டி ரிங்ரோடு அமைக்கும் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தவும், அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.