6 மாதமாக குடிநீர் வழங்காததால் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்


6 மாதமாக குடிநீர் வழங்காததால் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2018 10:00 PM GMT (Updated: 10 July 2018 7:59 PM GMT)

உசிலம்பட்டியில் முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள போத்தம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்டது வி.பெருமாள்பட்டி. இந்த கிராமத்தில் கடந்த 6 மாதமாக குடிநீர் முறையாக வழங்காததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

அதைத்தொடர்ந்து நேற்று வி.பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள உசிலம்பட்டி–பேரையூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லிங்கசாமி, நாகராஜ், ராமர் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலகிருஷ்ணன், பொறியாளர் கண்ணன், வினோத் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வி. பெருமாள்பட்டி கிராமத்திற்கு குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கு முன்னதாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story