5 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.81 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


5 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.81 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 July 2018 10:45 PM GMT (Updated: 10 July 2018 8:08 PM GMT)

5 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.81 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் அருகே அருகம்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 23). இவர் வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலை அருகே சேலம் மெயின்ரோடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு கவுதம் தனது கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறக்க வந்தபோது கடை ஷட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.1,000 மற்றும் 60 கிராம் வெள்ளி சங்கிலி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் கடையிலிருந்து குளிர்பானங்களை எடுத்து குடித்து விட்டு சிப்ஸ் பாக்கெட்டுகளையும் அவர்கள் எடுத்து தின்றிருந்தது தெரிய வந்தது.

இதேபோல் அங்கிருந்த பால் பாக்கெட் விற்பனை செய்யும் தனபாலுக்கு சொந்தமான கடையில் ரூ.2,000-ம், மடிக்கணினியும், அருகே இருந்த பழக்கடையில் ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்றிருக்கின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறிது தூரம் தள்ளி எஸ்.பி.காலனி பகுதியிலுள்ள 2 மளிகை கடைகளில் பூட்டை உடைத்து ரூ.68 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. மேலும் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் திருடர்களின் உருவம் ஏதும் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அடுத்தடுத்து கடைகளில் பணம் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர் அருகே 5 கடைகளில் பணம் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்களும் வெளியூர் உள்ளிட்டவற்றிற்கு செல்ல வீட்டில் யாரையாவது விட்டுவிட்டு தான் போக வேண்டும் என நினைக்கும் வகையில் திருட்டு கும்பலின் கைவரிசையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்-வியா பாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story