மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்


மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 July 2018 3:15 AM IST (Updated: 11 July 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம், செய்யூர் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.3¾ லட்சம் அபராதம் விதித்தனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மாலதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில் மதுராந்தகம் தாசில்தார் ஏகாம்பரம், செய்யூர் தாசில்தார் லட்சுமி ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது மதுராந்தகத்தை அடுத்த வெள்ளபுத்தூர், கரிகிலி, செய்யூரை அடுத்த சிறுமையிலூர், சூனாம்பேடு ஆகிய பகுதிகளில் மணல் கடத்திய 3 டிராக்டர்கள், 5 மாட்டுவண்டிகள் மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மாலதி தலைமையில் அதிகாரிகள் மதுராந்தகத்தை அடுத்த பாப்பநல்லூர், நெல்வாய், கடவம்பாக்கம், வான்ராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சவுடு மற்றும் ஆற்றுமணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு டிராக்டர், 5 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.3¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மாலதிக்கு கிடைத்த ரகசிய தகவலால் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மணல் கடத்தலை தடுத்த மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மாலதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வெகுவாக பாராட்டினார்.


Next Story