8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: இளைஞர் பெருமன்றத்தினர் சாலை மறியல் 11 பேர் கைது


8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: இளைஞர் பெருமன்றத்தினர் சாலை மறியல் 11 பேர் கைது
x
தினத்தந்தி 11 July 2018 11:00 PM GMT (Updated: 11 July 2018 5:17 PM GMT)

8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக சேலத்தில் இளைஞர் பெருமன்றத்தினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதால் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம்–சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக விவசாயிகளின் வீடுகள், நிலங்கள், தோட்டங்கள் ஆகியவற்றை கையகப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் காவல்துறை சார்பில் பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக எந்த அமைப்பும் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் அனுமதியை மீறி யாரேனும் போராட்டம் நடத்தினால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் போலீஸ் உயர் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பசுமை சாலைக்காக நிலம் எடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசை கண்டித்தும், 8 வழி பசுமை சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடக்கோரியும் சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.

அப்போது, பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் பாரதி, ரமேஷ் உள்பட நிர்வாகிகள் 11 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி சென்று கோட்டை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

முன்னதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில துணை செயலாளர் பாரதி கூறுகையில், பெரும் முதலாளிகளுக்காகவே சேலம்–சென்னை இடையே பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். விளை நிலங்களை அழித்து பசுமை சாலை அமைப்பது தேவையா? இந்த திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கைவிடாவிட்டால் அடுத்த கட்டமாக அரசு அலுவலங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், என்றார்.


Next Story