பெண்ணை வனத்தில் கிராம மக்களை துரத்திய காட்டு யானை வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிப்பு
பெண்ணை வனத்தில் கிராம மக்களை காட்டு யானை ஒன்று துரத்தியது. இதனால் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவர்கள் தவித்தனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனத்தில் உள்ளது. இங்கு முதுகுளி, புலியாளம், நாகம்பள்ளி, மண்டக்கரை, கோலிமலை, மற்றும் நெலாக்கோட்டை அருகே பெண்ணை வனத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனம் என்பதால் இப்பகுதி மக்களுக்கு சாலை, நடைபாதை, மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், கரடிகள் உள்பட வனவிலங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை திட்ட பணிகள் முழுமை பெறவில்லை. இதனால் தொடர்ந்து வனத்தில் வாழும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். அத்தியாவசிய தேவைகள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் வனத்தில் இருந்து வெளியே வந்து செல்ல வேண்டிய நிலை கிராம மக்களுக்கு உள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பெண்ணை கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் தங்களது வீடுகளுக்கு ஒற்றையடி பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டு யானை ஒன்று எதிர்பாராதவிதமாக எதிரே வந்தது. பின்னர் சற்று நேரத்தில் அந்த யானை பொதுமக்களை துரத்த தொடங்கியது. இதனால் பயத்தில் கூச்சலிட்டவாறு அனைவரும் தப்பி ஓடினர். தொடர்ந்து காட்டு யானை அப்பகுதியில் நின்றிருந்ததால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர். பல கட்ட போராட்டத்துக்கு பிறகு யானை அங்கிருந்து சென்றது. பின்னர் பெண்ணை மக்கள் தங்களது வீடுகளுக்கு நடந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story