குடிமராமத்து பணியை மேற்கொள்ள வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை 50 பேர் கைது


குடிமராமத்து பணியை மேற்கொள்ள வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை 50 பேர் கைது
x
தினத்தந்தி 12 July 2018 10:45 PM GMT (Updated: 12 July 2018 8:45 PM GMT)

விவசாயிகள் கொண்ட குழு அமைத்து குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி திருவாரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

விவசாயிகள் கொண்ட குழு அமைத்து குடிமராமத்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் உள்ள பொதுப்பணித்துறை வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாவட்ட தலைவர் ரெங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மாவட்ட தலைவர் தம்புசாமி, விவசாயிகள் நல சங்க மாநில தலைவர் சேதுராமன், மாநில செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்துக்கு 76 குடிமராமத்து பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குடிமராமத்து பணிகளை விவசாயிகள் கொண்ட குழு அமைத்து மேற்கொள்ளப்படுமென முதல்-அமைச்சர் சட்ட மன்றத்தில் அறிவித்திருந்தார். இதுவரை விவசாயிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்படவில்லை. வழக்கம்போல் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக பணிகளை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதனை கண்டித்தும், விவசாயிகள் கொண்ட குழு அமைத்து குடிமராமத்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை திருவாரூர் போலீசார் கைது செய்தனர்.

Next Story