லாரி மோதியதால் வாய்க்காலில் இறங்கிய அரசு பஸ் டிரைவர்கள்-பயணிகள் காயம்


லாரி மோதியதால் வாய்க்காலில் இறங்கிய அரசு பஸ் டிரைவர்கள்-பயணிகள் காயம்
x
தினத்தந்தி 13 July 2018 4:15 AM IST (Updated: 13 July 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் லாரி மோதியதால் அரசு பஸ் வாய்க்காலில் இறங்கியது. இந்த விபத்தில் டிரைவர்கள் மற்றும் பயணிகள் காயம் அடைந்தனர்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் இருந்து நேற்று காலை காவற்கூடம் என்ற பகுதிக்கு அரசு டவுன்பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை செழியன் என்பவர் ஓட்டிவந்தார். பரட்டை என்ற இடம் அருகே சென்றபோது எதிரே வேலூரில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அரசு பஸ் மீது மோதியது. இதனால் பஸ் பின்னோக்கி சென்று சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விட்டு அருகில் இருந்து வாய்க்காலில் இறங்கியது.

இந்த விபத்தில் பஸ் மற்றும் லாரியின் முன் பக்கங்கள் அப்பளம் போல் நொறுங்கின. விபத்தில் பஸ் டிரைவர் செழியன், லாரி டிரைவர் பூபாலன், பயணிகள் மாரியப்பன், உஷா பாண்டி உள்பட பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாய்க்காலில் இறங்கிய பஸ்சை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வாய்க்காலில் இறங்கிய அரசு பஸ்சை அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறங்களிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. 

Next Story