சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை - சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையரிடம் மனு


சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை - சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையரிடம் மனு
x
தினத்தந்தி 14 July 2018 4:30 AM IST (Updated: 14 July 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நகரில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க கோரி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் சட்டசபை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் நேற்று நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமாரை சந்தித்து மனு அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

நாகர்கோவில் நகருக்கு உட்பட்ட பல்வேறு சாலைகள் குறிப்பாக 29-வது வார்டுக்கு உட்பட்ட வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து ராஜா மண்டபத்துக்கு செல்லும் சாலை, 26-வது வார்டுக்கு உட்பட்ட கிறிஸ்துநகர் செல்லும் சாலை, 22-வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா தெரு, 6-வது வார்டுக்கு உட்பட்ட அறுகுவிளை சாலையில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலை போன்றவை மிகவும் மோசமாக உள்ளது.

இதேபோல 32-வது வார்டுக்கு உட்பட்ட மணிமேடை முதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் சாலை, 11-வது வார்டுக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள சாலை, கோட்டார் வாகையடி ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் குடிநீர் கிணறுகள் பழுதடைந்து உள்ளன. அவற்றின் மோட்டார்களும் சேதம் அடைந்துள்ளதால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. சுப்பையார் குளத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தன.

சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கவும், ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் சரவணக்குமார், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ.வுடன் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், நாஞ்சில் மணி உள்பட பலர் சென்றிருந்தனர்.

Next Story