மாவட்ட செய்திகள்

இளைஞர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் + "||" + Young people will ruin life Thug law will fall on drug sellers

இளைஞர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்

இளைஞர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்
“இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டசபையில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் அறிவித்தார்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டணி ஆட்சியின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாள் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். அதைத்தொடர்ந்து 5-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் மீது விவாதம் தொடங்கி நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு குமாரசாமி நேற்று முன்தினம் பதிலளித்தார்.


நடப்பு விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக அவர் அறிவித்தார். ஒரு நாள் கூட்டத்தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 10-வது மற்றும் இறுதி நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், பா.ஜனதா உறுப்பினர்கள் கொண்டு வந்த, சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை குறித்த தீர்மானம் சபை விதி எண் 69-ன் கீழ் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்திற்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

போதைப்பொருளால் இளைஞர்களின் வாழ்க்கை பாழாகிறது. இது மிக முக்கியமான பிரச்சினை ஆகும். அவற்றை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயாராக உள்ளது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தின் பின்னணியில் இருந்து செயல்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

விசா காலம் முடிந்த பிறகும் கர்நாடகத்தில் தங்கி இருக்கும் வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். முன்பு நான் போலீஸ் மந்திரியாக இருந்தபோது, விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக கர்நாடகத்தில் தங்கி இருந்த 1,460 பேரை கண்டுபிடித்து அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பினேன். இதன் மீது மீண்டும் நான் கவனம் செலுத்துவேன்.

அனைத்து மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள் கல்லூரிகளுக்கு சென்று வெளிநாட்டு மாணவர்களின் விவரங்களை கேட்டு பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். பஞ்சாப்பை போல் பெங்களூரு போதைப்பொருளின் மையமாக மாற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டில் இருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருள்கள் வருகின்றன. அதே போல் பெங்களூருவில் இருந்தும் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்கள் அனுப்பப்படுகின்றன.

விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவில் பணியாற்றும் போலீசார் இன்னும் தீவிரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஜெர்மனியில் மோப்ப நாய்கள், போதைப்பொருள் உட்கொண்டு 6 மாதங்கள் ஆன பிறகும், அதை கண்டுபிடித்துவிடுகின்றன. அத்தகைய வசதி நம்மிடம் இல்லை.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

முன்னதாக இந்த விவாதத்தில் பா.ஜனதா உறுப்பினர் ஆர்.அசோக் கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. இதில் 50 பேர் வரை ஈடுபட்டுள்ளனர். இதனால் இளம் சமுதாயத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் விற்பனையை தடுக்க தனிப்படையை அமைக்க வேண்டும். இதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

இந்த வழக்கில் வாதாடும் வக்கீல்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி-கல்லூரிகளின் முதல்வர்களை அழைத்து பேசி, மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் டீ தூள்களில் போதைப்பொருள் விதைகள் கடத்தி கொண்டு வரப்படுகிறது.

பன்னரகட்டா பகுதியில் சில பண்ணைகளில் கஞ்சா பயிரிட்டு வளர்ப்பதாக தகவல்கள் இருக்கின்றன. கேரளாவை போல் கர்நாடகத்தில் கஞ்சா, கோகைகன் போன்ற போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாநிலத்தில் சுமார் 5 லட்சம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் உள்ளனர். தினமும் கோடிக்கணக்கான ரூபாய் போதைப்பொருள் வருகிறது.

இந்த போதைப்பொருள் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த போதைப்பொருள் எல்லா இடங்களிலும் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இணையதளம் மூலமாகவும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. இளம் சமுதாயத்தினரை பாதுகாக்க வேண்டுமென்றால் போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.

அதைத்தொடர்ந்து பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்குமார் பேசுகையில், “போதைப்பொருள் விற்கும் கும்பல் பற்றி போலீஸ் துறையிடமே தகவல்கள் உள்ளன. இந்த போதைப்பொருளை கட்டுப்படுத்தாவிட்டால் இளம் சமுதாயத்தினரை பலி கொடுப்பது போல் ஆகிவிடும். குடிசை பகுதிகள், விளையாட்டு மைதானங்கள், ரெயில் நிலையங்கள், கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக கர்நாடகத்தை மாற்ற வேண்டும்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா உறுப்பினர் சோமண்ணா, “போதைப்பொருள் பாதிப்பு புற்றுநோயை விட மோசமானது. கேரளாவில் போதைப்பொருள் நடமாட்டம் பெரிய அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் கர்நாடகத்திலும் அவற்றை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, பெலகாவி போன்ற பகுதிகளிலும் இந்த போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. இதை முழுமையாக தடுக்க கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். இதில் பயிற்சி பெற்ற போலீசாரை ஈடுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்யப்பட்ட 15 நாட்களில் வெளியே வந்துவிடுவார்கள். எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து செயல்பட வேண்டும்“ என்றார்.

அதன் பிறகு பா.ஜனதா உறுப்பினர் அரவிந்த் லிம்பாவளி பேசுகையில், “போதைப்பொருள் பிரச்சினை ஒரு சமூக பிரச்சினையாக மாறிவிட்டது. பெங்களூரு சுற்றிலும் கஞ்சா பயிரிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி-கல்லூரி முதல்வர்களின் கூட்டத்தை நடத்தி போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அறிவுறுத்த வேண்டும். வழி தவறி செல்லும் இளைஞர்களை சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும். மனநல மருத்துவ மையங்களை தொடங்கி, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களை திருத்த வேண்டும். விசா காலம் நிறைவடைந்தும் இங்கே தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.