ஜெயலலிதாவின் எண்ணத்தை நனவாக்கும் வகையில் மதுரையில் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகம் கட்டப்படுகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
ஜெயலலிதாவின் எண்ணத்தை நனவாக்கும் வகையில் மதுரையில் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகம் கட்டப்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவின் எண்ணத்தை செயல்படுத்தும் விதமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஒ.பன்னீர் செல்வமும் ஆட்சி செய்து வருகிறார்கள். மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் எந்தவித தொய்வின்றி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்கட்சிகள் வேண்டுமென்றே அ.தி.மு.க. அரசு மீது பொய் பிரசாரங்களை செய்து வருகிறார்கள். ஆனால் இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இனி என்றைக்குமே ஆட்சி கட்டிலில் அமரபோவதில்லை. ஏனென்றால் கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகளை மக்கள் மறக்கவில்லை. அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளை எல்லாம் மக்கள் நகைச்சுவையாக பார்க்கிறார்கள். ஏனென்றால் ஊழல், ரவுடிசம் குறித்து தி.மு.க. பேசுவது சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது என்று மக்களே சொல்கிறார்கள்.
மதுரையில் இதுவரை யாரும் செயல்படுத்தாத பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உதாரணமாக ரூ.1200 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள பெரியாறு குடிநீர் திட்டத்தை எடுத்து கொள்ளுங்கள். இதனை செயல்படுத்தி விட்டால், மதுரை மக்களுக்கு 100 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இல்லை. அதே போல் போக்குவரத்து நெரிசலை குறைக்க காளவாசலில் உயர்மட்ட மேம்பாலம் ரூ.55 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி கோரிப்பாளையம், அப்பல்லோ, தெற்குவாசல் ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி வாகன காப்பகம், பெரியார் பஸ் நிலையம் சீரமைப்பு உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. மிக முக்கியமாக மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வருகிறது. அதன் அருகில் தோப்பூர் சாட்டிலைட் சிட்டி அமைக்கப்படுகிறது. ரிங்ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்படி திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் ஒரே மாதிரியான கட்சி அலுவலகம் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். அதற்கான வடிவமைப்பையும் செய்து கொடுத்து இருந்தார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் மதுரை பரவையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் கட்டப்படுகிறது. 15 ஆயிரம் சதுரடி இடத்தில் 6,000 சதுரடியில் கட்சி அலுவககம் கட்டிடம் கட்டப்படுகிறது. அலுவலக முகப்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகள் இடம் பெறும். கூட்ட அரங்கு உள்பட அனைத்து வசதிகளுடன் கட்சி அலுவலகம் இருக்கும்.
இந்த கட்சி அலுவலகத்திற்கான பூமிபூஜை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. அதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதே போல் காளவாசல் மேம்பாலம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.