மக்களை தேடி சென்று கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் தம்பிதுரை-விஜயபாஸ்கர் பங்கேற்பு


மக்களை தேடி சென்று கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் தம்பிதுரை-விஜயபாஸ்கர் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 July 2018 4:30 AM IST (Updated: 15 July 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ஒன்றிய பகுதிகளில் மக்களை தேடி சென்று கோரிக்கை மனு பெறும் முகாமில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று மனுக்களை பெற்றனர்.

கரூர்,

கரூர் ஒன்றியம் மற்றும் சோமூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான இடையார்பாளையம், கே.கே.நகர், செல்லாண்டிபாளையம், குடித்தெரு, இந்திராகாலனி, ஆதிதிராவிடர் தெரு, முத்தமிழ்புரம், காளியப்பகவுண்டன்புதூர், காளியப்பகவுண்டன்புதூர் காலனி, கல்லுப்பாளையம் காலனி, கல்லுப்பாளையம், எழுத்துப்பாறை காலனி, அண்ணாநகர், திருமுக்கூடலூர், அம்பேத்கர் நகர், அச்சமாபுரம் ஆகிய பகுதிகளிலும் மற்றும் நெரூர் தென்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட அரங்கநாதம்பேட்டை, நேருஜி நகர், புதுப்பாளையம், புதுத்தெரு, மரவாபாளையம், அக்ரஹாரம், என்.எஸ்.கே.நகர், ஆர்.சி.தெரு, எம்.ஜி.ஆர்.நகர், வேடிச்சிபாளையம் ஆகிய பகுதிகளிலும் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று முகாம் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற்றனர். முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பேசுகையில், கரூர் பகுதிகளில் மக்களின் தேவைகள் குறித்து அறிந்து மக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மனுக்களை பெறுவதுடன் அப்பகுதியில் மக்களுக்கு தேவையான சுகாதாரம், மின்சாரம், குப்பைகள் அகற்றுதல், கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் போன்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் பேசுகையில், மக்களை தேடி சென்று மனுக்கள் பெறும் இந்த முகாமில் பெரும்பாலும் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர், மின்விளக்கு தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடி தீர்வு செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் பாலத்துறை, வேலாயுதம்பாளையம் வாய்க்கால் பகுதியில் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டிலுள்ள வாய்க்கால்கள், வாரிகள் தூர்வாரவும் மற்றும் புனரமைக்கவும் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 10 பணிகளுக்கு ரூ.2 கோடியே 32 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளின் பங்களிப்புடன் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 14,394 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. இத்திட்டத்தில் ஒரு பணியாக மண்மங்கலம் வட்டம் புகளூர் வாய்க்காலை கோம்புபாளையம் கிராமத்திலிருந்து புகளூர் கிராமம் வரை 9.6 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரும் பணி ரூ.17 லட்சம் மதிப்பிலும், கரூர் மாவட்டம், புகளூர் வாய்க்கால் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம் மூலம் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மண்மங்கலம் வட்டத்திலுள்ள 8,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ, கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் கற்பகம், மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story