நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை: மரம் வேரோடு விழுந்து கல்லூரி மாணவர் பலி
நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஊட்டியில் மரம் வேரோடு விழுந்து கல்லூரி மாணவர் பலியானார். அதிர்ஷ்டவசமாக தாய், மகன் உயிர் தப்பினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி–குன்னூர் சாலை, ஊட்டி–கூடலூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொடர் மழையால் சாலையோரங்களில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக இருக்கிறது.
சாலையில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். ஊட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் ஊட்டி நகரில் பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததது.
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர். ஊட்டியில் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரோஷிணி. இவர்களுடைய மகன்கள் இமான் அகஸ்டின் (வயது 18), விபின் (12). இவர்களில் இமான் அகஸ்டின் கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி இருந்து பி.காம். சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை என்பதால் அவர் ஊட்டிக்கு வந்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரார்த்தனை செய்வதற்காக காலை 9.15 மணியளவில் ரோஷிணி தனது இரண்டு மகன்களுடன் அதே பகுதியில் உள்ள புனித தெரேசா அன்னை ஆலயத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
ரோஷிணியும், விபினும் முன்னால் நடந்து சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து இமான் அகஸ்டின் சென்று கொண்டு இருந்தார். அவர்கள் ஊட்டி–கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பிங்கர்போஸ்ட் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது சாலையோரத்தில் இருந்த இரண்டு மரங்கள் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
மரம் விழுந்ததை பார்த்ததும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதில் 100 அடி உயரம் உள்ள ஒரு மரம் இமான் அகஸ்டின் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இமான் அகஸ்டின் பரிதாபமாக இறந்து விட்டார். ரோஷிணி, விபின் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் வளைந்தது. மேலும் அங்கிருந்து ஒரு கடையும் சேதமடைந்தது. தன் கண்முன்னே மகன் இறந்ததை பார்த்த ரோஷிணி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
பிங்கர்போஸ்ட்டில் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி பொதுமக்களும் மரங்களை அப்புறப்படுத்த உதவிகளை செய்தனர்.
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா மரங்கள் விழுந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக வாகனங்கள், பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.