காரில் கடத்தப்பட்ட தொழில் அதிபர் 4 மணி நேரத்தில் மீட்பு 6 பேர் கைது


காரில் கடத்தப்பட்ட தொழில் அதிபர் 4 மணி நேரத்தில் மீட்பு 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 July 2018 4:45 AM IST (Updated: 16 July 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

கோட்டைப்பட்டினத்தில் காரில் கடத்தப்பட்ட தொழில் அதிபரை போலீசார் 4 மணி நேரத்தில் மீட்டனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவை சேர்ந்தவர் சர்க்கரை ஜமால் என்ற ஜமால்முகமது(வயது 50). தொழில் அதிபரான இவர் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியில் இறால், மீன் போன்றவற்றை வாங்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

ஜமால்முகமது தினமும் அதிகாலையில் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை நடத்துவது வழக்கம். அதுபோல் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்காக தனது மகன் யாசர்அராபத்துடன், ஜமால்முகமது நடந்து சென்றார். அவர் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் சென்றபோது, அங்கு நின்றிருந்த காரில் இருந்து திடீரென இறங்கிய 4 பேர், கத்தியை காட்டி மிரட்டி ஜமால்முகமதுவை காரில் கடத்தி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த யாசர்அராபத், இது குறித்து கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன், அறந்தாங்கி துணை சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி, ஆலங்குடி துணை சூப்பிரண்டு ஆப்துல்முத்தலிப் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டதோடு, மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஜமால்முகமதுவை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் காலை 9 மணியளவில் வடகாடு போலீஸ் சரகம் கருக்காக்குறிச்சி பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது, ஜமால்முகமதுவை கடத்தி வந்தவர்கள், தாங்கள் வந்த கார்களை நிறுத்திவிட்டு கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து தப்ப முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, ஜமால்முகமதுவை மீட்டனர்.

இதையடுத்து அவரை கடத்தியதாக ஜெகதாப்பட்டினம் கோடகுடியை சேர்ந்த முத்துக்குமார்(39), மதுரை கூடல்நகரை சேர்ந்த கோபி(23), கருக்காக்குறிச்சியை சேர்ந்த முத்துவேல்(40), மணிவாசகம்(34), மதுரை இளமனூரை சேர்ந்த ஹரிகரன்(19), மணக்காடை சேர்ந்த அய்யப்பன்(51) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடத்தப்பட்ட ஜமால்முகமதுவும், முத்துக்குமாரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டாக தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் ஜெகதாபட்டினத்தில் உள்ள ஒரு தியேட்டரை இருவரும் கூட்டாக வாங்கியுள்ளனர். தியேட்டரை வாங்கியபோது, முத்துக்குமார் அதை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டார். ஆனால் அந்த இடத்தின் மூலப்பத்திரம் ஜமால்முகமதுவிடம் இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த இடம் தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் முத்துக்குமார் ஜெகதாப்பட்டினம் தியேட்டர் உள்ள இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக ஜமால்முகமதுவிடம் மூலப்பத்திரத்தை கேட்டுள்ளார். அதற்கு ஜமால்முகமது மறுத்துள்ளார். மேலும் அந்த இடத்தை இருவரும் சேர்ந்து வாங்கியதால், விற்கும் பணத்தில் பாதியை தந்தால், மூலப்பத்திரம் தருவதாக, கூறியுள்ளார். அதற்கு முத்துக்குமார் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜமால் முகமதுவிடம் உள்ள மூலப்பத்திரத்தை பெறுவதற்காக, முத்துக்குமார் கூலிப்படையினரை வைத்து ஜமால்முகமதுவை கடத்தியது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட தொழில் அதிபரை 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story