சேதமடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் மறியல் பொதுமக்கள் அறிவிப்பு


சேதமடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் மறியல் பொதுமக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2018 10:30 PM GMT (Updated: 15 July 2018 9:11 PM GMT)

நாகையை அடுத்த நாகூர் வண்ணான்குளம் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூரில் வண்ணான்குளம் மேல்கரை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகை நகராட்சி சார்பில் சாலை அமைப்பதற்காக பழைய சாலையை எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் பக்கத்து தெரு பகுதியில் உள்ள தெரு சாலையை அமைப்பதற்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றுக்கூறி இந்த சாலையில் தோண்டியதை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் தற்போது இந்த பகுதியில் உள்ள சாலை மேலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு உதவாத நிலையில் உள்ளது. இதனால் வண்ணான்குளம் மேல்கரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையில் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும், இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், பெண்கள் அருகில் உள்ள பகுதிக்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஆனால் தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளதால் நடந்து செல்லும்போது கால் கற்களில் தட்டி கீழே விழுகின்றனர். சில நேரங்களில் கற்களில் சறுக்கி கீழேவிழுந்து காயமும் ஏற்படுகிறது. மேலும், இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்லவும் முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் வீட்டு வாசல்களில் கருப்பு கொடி ஏற்றி, பொதுமக்களை ஒன்றுத்திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். 

Next Story