எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் இரட்டை குழந்தைகள் பிறந்தன


எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் இரட்டை குழந்தைகள் பிறந்தன
x
தினத்தந்தி 16 July 2018 5:16 AM IST (Updated: 16 July 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

கல்யாண் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

மும்பை,

மும்பை குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

ரெயில் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த போது, திடீரென அந்த பெண்ணுக்கு பிரசவ வலி உண்டானது.

இதையடுத்து அந்த ரெயில் கல்யாண் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசார் ரெயில்வே டாக்டர்களுடன் விரைந்து வந்தார்.

அவர்கள் ரெயிலில் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அந்த பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில் ஒன்று ஆண் குழந்தை மற்றொன்று பெண் குழந்தை ஆகும்.

இதன்பின்னர் தாய், சேய்கள் மூவரும் சிகிச்சைக்காக ருக்மினிபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரெயிலில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் மும்பை காட்கோபர் நாராயண் நகரை சேர்ந்த சேக் சல்மான் தாப்பூசும் (வயது30) என்பது தெரியவந்தது. 

Next Story