குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு
குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளச்சல்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் கடற்கரை பகுதியில் கடல்சீற்றம் நிலவி வருவதால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நித்திரவிளை அருகே தூத்தூர், பூத்துறை போன்ற பகுதிகளில் கடலில் ராட்சத அலைகள் எழுந்து தடுப்பு சுவரையும் தாண்டி ஊருக்குள் புகுந்தன. இதனால், கரையோர பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தன.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், வடகிழக்கு வங்கக்கடலில் ஒடிசாவை ஒட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால், கடலில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கடல் சீற்றம் ஏற்படலாம் என்றும், எனவே, தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, குமரி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களிலும் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆனால், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று மதியம் கரை திரும்புவார்கள்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை முதல் குளச்சலில் கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து வேகமாக கரையை நோக்கி சீறி வந்த வண்ணம் இருந்தன. குளச்சல் துறைமுகம் பாலம் அருகே பல அடி உயரத்தில் அலைகள் எழுந்து பாலத்தின் மீது மோதி சிதறின.
கடல் சீற்றம் காரணமாக நேற்று அதிகாலையில் பெரும்பாலான கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது படகு, வலை போன்ற மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர். இதற்கிடையே ஒருசில மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்கள் அதிக அளவில் கிடைக்காததால் பாதியில் கரை திரும்பினர்.
இதனால், குளச்சல் மீன் சந்தையில் மீன் வரத்து குறைந்தது. மீன்களை வாங்குவதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நித்திரவிளை அருகே தூத்தூர், பூத்துறை போன்ற பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய கடல் சீற்றம் நேற்று விடிய விடிய நீடித்தது. கடற்கரை பகுதியில் பலத்த மழையுடன் காற்று வீசிய வண்ணம் இருந்தது. ராட்சத அலைகள் எழுந்து கரையில் மோதி சிதறின. இதனால், நேற்று இந்த பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி நேற்று காலையில் கடல் இயல்பு நிலையில் காணப்பட்டது. இதனால், காலை 8 மணிக்கு வழக்கம்போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. 9 மணியளவில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் தோன்றின. உடனே, படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்துடன், விவேகானந்தர் மண்டபத்துக்கு ஏற்கனவே அழைத்து செல்லப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் அவசரம், அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.