கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 14–ம் ஆண்டு நினைவு தினம்


கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 14–ம் ஆண்டு நினைவு தினம்
x
தினத்தந்தி 17 July 2018 4:30 AM IST (Updated: 16 July 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 14–ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004–ம் ஆண்டு ஜூலை 16–ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். உலகை உலுக்கிய இந்த சம்பவம் நடந்து நேற்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெற்றது. உயிரிழந்த குழந்தைகள் நினைவாக கும்பகோணம் பாலக்கரையில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது. இதையொட்டி

நேற்று காலை குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அவரவர் வீட்டில் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்து படையலிட்டனர்.

பின்னர் தீ விபத்து நிகழ்ந்த கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி முன் பெற்றோர்கள் கூடினர். அங்கு பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 94 குழந்தைகளின் உருவப்படங்கள் பேனருக்கு மாலை அணிவித்தனர். மேலும் பெற்றோர் மலர் தூவியும், தின்பண்டங்களை வைத்து குழந்தைகளின் படங்களை பார்த்து கதறி அழுதனர். இந்த காட்சி அனைவரின் மனதையும் நெகிழ செய்தது. தீ விபத்தில் படுகாயமடைந்த குழந்தைகள் தங்கள் நண்பர்கள் நினைவாக பள்ளி முன் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பெற்றோர் பள்ளியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவிடத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை நினைத்து நினைவிடம் முன் கதறி அழுதனர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், கும்பகோணம் தாசில்தார் வெங்கடாஜலம், நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி, தி.மு.க மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம், நகர செயலாளர் சுப.தமிழழகன், அ.தி.மு.க நகர செயலாளர் ராம.ராமநாதன், ஒன்றிய செயலாளர் சோழபுரம் கா.அறிவழகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில பொருளாளர் எம்.ரெங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை பள்ளியிலிருந்து பெற்றோர் அகல் தீபம் ஏற்றி ஊர்வலமாக சென்று மகாமக குளக்கரையில் மோட்சதீபம் ஏற்றினர்.


Next Story