டி.கல்லுப்பட்டி அருகே கடனை திருப்பிக் கேட்ட 2 பேர் மீது தாக்குதல், மோட்டார்சைக்கிளுக்கும் தீ வைப்பு
டி.கல்லுப்பட்டி அருகே கடனை திருப்பிக் கேட்ட பெண் உள்பட 2 பேர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
பேரையூர்,
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சிலார்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பெரியநாச்சி (வயது 26). இவர் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கி கொடுத்து அதனை வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த இருளாண்டி மனைவி தமிழ்செல்விக்கு பெரியநாச்சி கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவர் கடனை சரியாக திருப்பி செலுத்த வில்லையாம்.
இதனால் பெரியநாச்சி, தமிழ்செல்வியின் வீட்டுக்கு சென்று தவணை பணம் கேட்டு உள்ளார். இதில் தமிழ்செல்வியின் கணவர் இருளாண்டி ஆத்திரம் அடைந்து பெரியநாச்சியை அடித்து உதைத்து வீட்டிக்குள் அடைத்து வைத்து உள்ளார். தகவல் அறிந்த பெரியநாச்சியின் உறவினர் குருசாமி அங்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த இருளாண்டி இருவரையும் அடித்து உதைத்து சாதியை சொல்லி திட்டினாராம். பின்னர் குருசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் தீ வைத்து எரித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருளாண்டியை தேடி வருகின்றனர்.