ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமியிடம் மனு
ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்ககோரி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர் ஆலையை பார்வையிட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
தாயில்பட்டி,
விருதுநகருக்கு வந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆலங்குளம் சிமெண்டு ஆலை பாதுகாப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.
அதில், மறைந்த முதல்–அமைச்சர்ஜெயலலிதா 2015–ம் ஆண்டு ஆலங்குளம் சிமெண்டு ஆலை ரூ.190 கோடியில் புனரமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் உற்பத்தி நிறுத்தப்பட்ட அரசு ஆஸ்பெஸ்டாஸ் ஆலையை மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் நிர்வாக இயக்குனர் ஆலைக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். சில ஆவணங்களையும் அவர் வழங்கினார்.
அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும் ஆலையை ஆய்வு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதாக கண்ணன் தெரிவித்துள்ளார்.