கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு


கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 July 2018 4:30 AM IST (Updated: 17 July 2018 8:26 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பட்டப்பகலில் கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

ஆரல்வாய்மொழிக்கும், காவல் கிணறுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரி தலைவராக இருப்பவர் ஜான்சல் ராஜா (வயது 55). இவர் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த மறைந்த எஸ்.ஏ.ராஜாவின் மகன் ஆவார். ஜான்சல் ராஜா நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று காலை 11.30 மணி அளவில் வீட்டில் இருந்து காரில் செட்டிகுளம் சந்திப்பு பகுதிக்கு புறப்பட்டார்.

காரை அவரே ஓட்டிச் சென்றார். செட்டிகுளம் சந்திப்பில் இருந்து சிறிது தொலைவுக்கு முன்பாக சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய சங்க அலுவலகத்துக்கு சென்றார்.


திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்பக்க கதவு கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட ஜான்சல் ராஜா அதிர்ச்சி அடைந்தார். உடனே பின்புற இருக்கையில் வைத்திருந்த கைப்பை இருக்கிறதா? என்று பார்த்தார். அதனை காணவில்லை. அந்த கைப்பையில் ரூ.50 ஆயிரம் ரொக்கம், காசோலை புத்தகங்கள், ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.

உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் கோட்டார் சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கண்ணாடி உடைக்கப்பட்ட காரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஜான்சல் ராஜா கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


கார் நின்ற பகுதியில் உள்ள கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பணம் கொண்டு செல்பவர்களை நோட்டமிட்டு, அவர்களை பின் தொடர்ந்து சென்று பணம் மற்றும் நகைகள், பொருட்களை கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள் திருச்சி ராம்ஜிநகர் கொள்ளையர்கள் தான். அவர்கள் தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் நாகர்கோவில் நகரப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியது.

Next Story