ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது
ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது.
சேலம்,
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஐந்தருவிகள் மற்றும் பிரதான மெயின் அருவி, பெரிய பாணி உள்ளிட்ட பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்தப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல முடியாத வகையில் நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது. இதன்காரணமாக அணை நீர்மட்டம் அன்று இரவு 92 அடியை எட்டியது. இதனிடையே நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 95.73 அடியாக உயர்ந்திருந்தது. ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததால் இரவு 8 மணியளவில் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. நள்ளிரவில் 102 அடியாக உயருகிறது. அணை வரலாற்றில் 100 அடியை எட்டுவது 64–வது முறையாகும்.
கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8–ந்தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன்பின்னர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) தண்ணீர் திறந்து விடுகிறார்.
அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையொட்டி கடல் போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணையை காண நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.