கூடலூரில் பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு


கூடலூரில் பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 July 2018 10:45 PM GMT (Updated: 17 July 2018 8:09 PM GMT)

கூடலூரில் காட்டு யானை துரத்தியதால் 3 பேர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலுார்,

கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் கூடலுார்- முதுமலை புலிகள் காப்பகம் எல்லையில் தொரப்பள்ளி என்ற இடத்தில் கடைகள், குடியிருப்புகள் உள்ளன. தமிழக- கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சாலை என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்படுகிறது. இதுதவிர கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு ஏராளமான சரக்கு லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே முதுமலை வனத்தில் இருந்து 3 காட்டு யானைகள் இரவில் வெளியேறி தொரப்பள்ளி, குனில், அள்ளூர் வயல், புத்துார்வயல் உள்ளிட்ட பகுதியில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மாலை நேரம் தொடங்கி விட்டால் தொரப்பள்ளி பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் பீதியுடன் காட்டு யானைகளின் வருகையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொரப்பள்ளி பஜாருக்குள் காட்டு யானை நுழைந்தது. இதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 54) என்பவரை காட்டு யானை துரத்தியதால் அவர், அங்கிருந்து ஓடும்போது கீழே விழுந்து காயம் அடைந்தார். இருந்தபோதிலும் யானையிடம் சிக்காமல் அவர் சுதாகரித்தவாறு அங்கிருந்து தப்பி ஓடினார். இதேபோல் மதரஸா பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த பாத்திமாரியா (வயது 9), ரின்ஷானா (8) ஆகிய 2 சிறுமிகளையும்் காட்டு யானை துரத்தியது. இதை கண்ட அவர்கள் பயத்தில் வந்த வழியாக திரும்பி வீட்டை நோக்கி ஓடினர். அப்போது கால் இடறி 2 பேரும் கீழே விழுந்தனர். பின்னர் காட்டு யானையும் வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் காயம் அடைந்த அப்துல் ரகுமான், பாத்திமாரியா, ரின்ஷானா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் காட்டு யானையால் நாளுக்குநாள் தொல்லை ஏற்படுவதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதைத்தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி காலை 8 மணிக்கு கூடலூர் தொரப்பள்ளி பஜாரில் ஏராளமானவர்கள் திரண்டு, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கூடலூர்- மைசூரு இடையே வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர்போலீசார், முதுமலை புலிகள் காப்பாக துணை இயக்குனர் சண்முகப்பிரியா, வனச்சரகர்கள் சிவக்குமார், ராஜேந்திரன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில்் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், காட்டு யானைகளால் தினமும் விவசாய பயிர்கள் சேதம் அடைகிறது. இதனால் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி வருகிறோம். இதற்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்பட வில்லை. மேலும் பொதுமக்களை காட்டு யானைகள் தாக்கி வருகிறது. எனவே காட்டு யானைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் சண்முகப்பிரியா 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் ஏற்கனவே முதுமலை கரையோரம் உள்ள அகழியை தூர் வாருவதாகவும், காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 1.30 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் தமிழகம்- கர்நாடகா மற்றும் கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வெளியூர் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Next Story