ஆரணியில் பரபரப்பு விஷ பாட்டிலுடன் வங்கி முன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி போலீசார் விசாரணை
ஆரணி நகர போலீசார் வங்கி முன்பு திரண்டு விஷ பாட்டிலுடன் வந்த ஜோசப் மற்றும் முனிசாமி இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆரணி,
ஆரணியை அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் (வயது 68). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிசாமி (வயது 55) என்பவரும் ‘பவர்டில்லர்’ வாங்குவதற்காக கடந்த 2009–ம் ஆண்டு ஆரணியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிலப்பத்திரத்தை அடமானம் வைத்தனர். வங்கியில் ஜோசப் ரூ.1 லட்சத்து 15 ஆயிரமும் முனிசாமி ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும் கடன் பெற்றனர். நீண்ட நாட்களாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாததால் வங்கி சார்பாக கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் கோர்ட்டு மூலம் இருவரும் வங்கிக்கு பணம் செலுத்தினர்.
ஆனால் வங்கி அவர்களது நிலப்பத்திரத்தை வழங்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வங்கி முன்பு ஜோசப், விஷ பாட்டிலுடன் வந்தார். அவருடன் முனிசாமியும் வந்தார். இந்த நிலையில் ஜோசப் விஷம் குடிப்பதாக கூறி கூச்சலிட்டவாறே வெளியே வந்தார்.
தகவல் அறிந்த ஆரணி நகர போலீசார் வங்கி முன்பு திரண்டு விஷ பாட்டிலுடன் வந்த ஜோசப் மற்றும் முனிசாமி இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து வங்கி முதுநிலை மேலாளர் தனலட்சுமி கூறுகையில், ‘‘கோர்ட்டில் இருந்து பத்திரங்கள் எங்களுக்கு வரவில்லை, வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைக்கிறோம்’’ என்றார்.