திருமானூர் அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்


திருமானூர் அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 July 2018 10:45 PM GMT (Updated: 18 July 2018 5:43 PM GMT)

திருமானூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வாரணவாசி கிராமம் பெரம்பலூர்–மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி சென்று லாரி ஒன்று வேகவாக வந்ததது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த கொடிமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பயந்து அலறியடித்து ஓடினர்.


இதையடுத்து அந்த பகுதி கிராம மக்கள் பெரம்பலூர்–மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இங்கு விபத்து ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரம்பலூர்–மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்துவந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதே இடத்தில், கடந்த ஆண்டு மணல் ஏற்றி சென்ற லாரி வீடு மற்றும் கடையினுள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. லாரி மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மேலும், கடந்த 28–ந் தேதி பஸ்சுக்காக நிழற்குடையில் காத்திருந்த பயணிகள் மீது வேகமாக வந்த கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story