கரூர் நகருக்குள் ஆற்று நீர் வருவதை பார்க்க புதிய அமராவதி பாலத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


கரூர் நகருக்குள் ஆற்று நீர் வருவதை பார்க்க புதிய அமராவதி பாலத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 July 2018 4:15 AM IST (Updated: 19 July 2018 9:47 PM IST)
t-max-icont-min-icon

கரூர் நகருக்குள் அமராவதி ஆற்றில் நீர் வருவதை பார்க்க, புதிய அமராவதி பாலத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாலத்தில் இருந்தபடியே மலர்களை தூவி ஆற்று நீரை வரவேற்றனர்.

கரூர்,

திருப்பூர் மாவட்டம் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டும் வகையில் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நலன் கருதி உபரிநீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் காலை கரூர் மாவட்ட எல்லையான வடகரைக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை அமராவதி ஆற்று நீர் கரூர் நகரை அடைந்து ஓடுவதைபார்ப்பதற்காக புதிய அமராவதி பாலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் அதனை ஓரமாக நிறுத்திவிட்டு பாலப்பகுதியில் வந்து நின்றனர்.


காலை 11 மணியளவில் பாலத்தை கடந்து ஆற்று நீர் சீறிப்பாய்ந்தது. அப்போது ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை மேய்ச்சலுக்காக ஆற்றில் விட்டிருந்தவர்கள் உடனடியாக அதனை வெளியேற்றினர். மேலும் பாலத்தில் நின்றிருந்தவர்கள் பூக்களை அமராவதி ஆற்றில் தூவி வரவேற்றனர். இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை காண முடிந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பான சூழல் நிலவியது.


அமராவதி கிளை வாய்க்கால்கள் மூலம் இந்த ஆற்று நீர் பாசனத்திற்கு பயனுள்ளதாக அமைவதால் விவசாயிகள் பயிர் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் கரூர் நகரில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும் என்பதால் பொதுமக்களுக்கு ஆறுதல் தருவதாக அமராவதி நீர் இருக்கும். எனினும் அமராவதி ஆற்று நீரை கடைமடை பகுதிக்கும் கொண்டு சென்று பயன்படுத்த வேண்டும். வீணாக கடலில் கலந்து விடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story