ஆரணி சுற்று வட்டாரத்தில் 3 மாதமாகியும் நெற்பயிரில் கதிர்கள் வராததால் விவசாயிகள் வேதனை


ஆரணி சுற்று வட்டாரத்தில் 3 மாதமாகியும் நெற்பயிரில் கதிர்கள் வராததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 19 July 2018 11:15 PM GMT (Updated: 19 July 2018 7:40 PM GMT)

ஆரணி சுற்று வட்டாரத்தில் 3 மாதமாகியும் நெற்பயிரில் கதிர்கள் வராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள மருசூர், வடுகசாத்து, களம்பூர், கஸ்தம்பாடி உள்பட 30–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் களம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் ஓம்–3 ரக விதை நெல் கிலோ 35 ரூபாய்க்கு வாங்கி பயிரிட்டுள்ளனர். 3 மாதம் ஆன நிலையில் சுமார் 3½ அடி உயரம் வரை நெற்பயிர் வளர்ந்துள்ளது. ஆனால் கதிர்கள் வராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘ஓம்–3 ரக விதை நெல் குறைந்த விலைக்கு தருவதாகவும், அந்த நெல் அதிக மகசூல் தருவதாகவும் கூறினர். மேலும் தண்ணீர் இல்லாத நிலையிலும் 90 நாட்களில் அறுவடை செய்துவிடலாம் என தெரிவித்ததன் பேரில், நாங்கள் அந்த விதை நெல்லை வாங்கி பயிரிட்டோம்’ என்றனர்.

இதுகுறித்து ஆரணியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரம் கூறுகையில், ‘‘எங்களிடமே சி.ஒ.51, பி.பி.டி., என்.எல்.ஆர்., பொன்னி, ஏ.டி.டி. 45 போன்ற ரக விதை நெல்கள் விற்பனைக்கு உள்ளன. விவசாயிகள் அதிக மகசூல் வேண்டும், குறுகிய காலத்தில் அறுவடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதுபோன்று தனியாரிடமும், விதை நெல் விற்பதற்கான சான்று இல்லாத வியாபாரிகளிடமும் விதை நெல் வாங்கியுள்ளனர். இது போன்று ஆசைப்பட்டு வாங்கக்கூடாது.

இந்த விதையை ‘இப்புருட்’ விதை என்பார்கள். ஒருமுறை தான் பயிரிட முடியும். 2–வது முறை பயிரிட்டாலும் நெற்கதிர்கள் வராது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


Next Story