புதுக்கோட்டைக்கு இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


புதுக்கோட்டைக்கு இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 19 July 2018 11:15 PM GMT (Updated: 19 July 2018 10:30 PM GMT)

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று புதுக்கோட்டைக்கு வருவதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(வெள்ளிக்கிழமை) காலை ரெயில் மூலம் திருச்சிக்கு வருகிறார். பின்னர் அவர் திருச்சியில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டையில் உள்ள ரோஜா இல்லத்திற்கு வருகிறார். இதையடுத்து அவர் புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும், சில இடங்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மதிய உணவுக்கு பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் கவர்னர், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரோஜா இல்லத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். பின்னர் 5 மணியளவில் கார் மூலம் திருச்சிக்கு செல்கிறார்.


இந்நிலையில் தமிழக கவர்னர் புதுக்கோட்டைக்கு வர உள்ளதையொட்டி திருச்சி–காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுக்கோட்டை ரோஜா இல்லத்திற்கு வரும் சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளும் அகற்றப்பட்டு உள்ளன. புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நியைம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்றன.

மேலும் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் தூய்மை பணிகள் நடைபெற்றன. இதேபோல் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகளும் நேற்று நடைபெற்றன. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகதாம்பாள் கோவிலிலும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதனால் இன்று பிரகதாம்பாள் கோவிலுக்கு கவர்னர் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


கவர்னர் வருகையின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க புதுக்கோட்டை நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக கவர்னர் தங்கும் ரோஜா இல்லம் பகுதியில் போலீஸ் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தி.மு.க. போராட்டம் நடத்த உள்ள அரசு மகளிர் கலை கல்லு£ரி எதிரே உள்ள இடங்கள் போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, திருச்சி சரக டி.ஐ.ஜி லலிதாலட்சுமி, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. லோகநாதன், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story