சபாநாயகர், முதல்-அமைச்சர் வீடுகளை முற்றுகையிட முயற்சி பா.ஜ.க.வினர் 108 பேர் கைது


சபாநாயகர், முதல்-அமைச்சர் வீடுகளை முற்றுகையிட முயற்சி பா.ஜ.க.வினர் 108 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2018 10:15 PM GMT (Updated: 19 July 2018 6:52 PM GMT)

புதுவையில் சபாநாயகர், முதல்-அமைச்சர் வீடுகளை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 108 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அரசின் பரிந்துரையின் பேரில் 3 பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் வேளையில் அரசின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசு நேரடியாக பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

அவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்தார். இந்த நிலையில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் சட்டசபையின் உள்ளே செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோரது வீடுகளை முற்றுகையிட முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிடும் நோக்கில் பா.ஜ.க.வை சேர்ந்த அகிலன் உள்பட 7 பேர் நேற்று காலை சின்ன மணிக்கூண்டு அருகே ஒன்று கூடினர். இது பற்றிய தகவல் அறிந்து ஒதியஞ்சாலை போலீசார் அங்கு சென்று அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் முதல்-அமைச்சர், சபாநாயகரின் வீடுகளை முற்றுகையிடும் நோக்கில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் மாநில துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், சோமசுந்தரம், பொதுச்செயலாளர் தங்க விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திராகாந்தி சிலை அருகே வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனை தொடர்ந்து 13 பெண்கள் உள்பட 101 பேரை போலீசார் கைது செய்தனர்.

சட்டசபை கூட்டம் நடைபெற்றதால் தெற்கு பகுதி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சின்ன மணிக்கூண்டு அருகே போராட்டம் நடத்திய 7 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். சாமிநாதன் தலைமையில் கைதான 101 பேரும் சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story