சத்தி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது


சத்தி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது
x
தினத்தந்தி 19 July 2018 10:30 PM GMT (Updated: 19 July 2018 7:40 PM GMT)

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்வதற்கு முக்கிய பாதையாக உள்ளது. பஸ், கார், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் திம்பம் மலைப்பாதையையே பயன்படுத்துகின்றன.

அதிக பாரம் ஏற்றிக்கொண்டு மலைப்பாதை வழியாக வரும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு நின்று விடுகின்றன. மேலும் கவிழ்ந்து விடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் மலைப்பாதையின் 25-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திரும்ப முடியாமல் பழுதாகி நின்றது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், அங்கிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. ரோட்டின் இருபுறமும் பஸ், கார், லாரி, வேன் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுதான லாரியை சரிசெய்யும் பணி நடைபெற்றது. நேற்று காலை 8 மணி அளவில் லாரியின் பழுது சரிசெய்யப்பட்டது. அதன் பின்னரே லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் போக்குவரத்து நிலமை சீராகியது. லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story