சாலையில் நடந்து சென்ற தொழிலாளர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது; 2 பேர் பலி


சாலையில் நடந்து சென்ற தொழிலாளர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது; 2 பேர் பலி
x
தினத்தந்தி 19 July 2018 11:00 PM GMT (Updated: 19 July 2018 8:38 PM GMT)

குண்டடம் அருகே சாலையில் நடந்து சென்ற தொழிலாளர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த விபத்துகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே ஆர்.ஆர்.டி. என்ற நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திரா (வயது 24), சங்கரபத்ரா (26), பிரசாந்த் (26), சுப்ரா (24) மற்றும் சந்துருசாந்த் (38) ஆகிய 5 பேரும் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலையில் வேலை முடிந்ததும் இவர்கள் 5 பேரும் மில்லில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊதியூர்-குண்டடம் சாலையில் உள்ள பேக்கரிக்கு டீக்குடிக்க சென்று கொண்டிருந்தனர். இவர்கள் நவக்கொம்பு அருகே சென்று கொண்டிருந்தபோது குண்டடத்தில் இருந்து ஊதியூர் நோக்கி ஒரு கார் தாறுமாறாக வந்து கொண்டிருந்தது.

அந்த காரை பார்த்ததும் தொழிலாளர்கள் தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கார் தொழிலாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த கார் மோதிய சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரா என்பவர் பலியானார்.பலத்த காயம் அடைந்த மற்ற 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் கோவை செல்லும் வழியிலேயே சங்கர பத்ரா இறந்தார். மற்ற 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிலாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார், சாலையோரத்தில் இருந்து பள்ளத்தில் இறங்கியது. இதையடுத்து காரில் இருந்த 2 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் குண்டடம் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை மீட்டு, அந்த காரின் பதிவு எண்ணை கொண்டு அந்த கார் யாருடையது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தொழிலாளர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story