திடீரென மரணம் அடைந்த சிரூர் மடாதிபதியின் சாவு குறித்து விசாரணை நடத்தப்படும் முதல்–மந்திரி குமாரசாமி பேட்டி


திடீரென மரணம் அடைந்த சிரூர் மடாதிபதியின் சாவு குறித்து விசாரணை நடத்தப்படும் முதல்–மந்திரி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 20 July 2018 5:00 AM IST (Updated: 20 July 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

திடீரென மரணம் அடைந்த சிரூர் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமியின் சாவு குறித்து தேவைப்பட்டால் உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்–மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

திடீரென மரணம் அடைந்த சிரூர் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமியின் சாவு குறித்து தேவைப்பட்டால் உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்–மந்திரி குமாரசாமி கூறினார்.

சிரூர் மடாதிபதி

உடுப்பி மாவட்டம் சிரூரில் உள்ள சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகள் நேற்று திடீரென்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் தற்போது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மரணம் இயற்கை மரணமாக தெரியவில்லை என்று அவரது ஆதரவாளர்களும், பக்தர்களும் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமியின் வக்கீல் ரவி கிரண் முருடேஷ்வர் கூறியதாவது:–

மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகளின் மரணத்தில் சந்தேகமும், மர்மமும் உள்ளது. கடந்த மாதம்(ஜூன்) அவர் என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். அப்போது புத்திகே மடத்தை மட்டும் விட்டுவிட்டு, கிருஷ்ணா மடம் உள்பட மற்ற 6 மடங்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார்.

6 மடங்கள் மீது கிரிமினல் வழக்கு

அவர் கூறியபடியே நானும் மற்ற 6 மடங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதற்கான பணிகளில் ஈடுபட்டு இருந்தேன். இந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவால் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகள் இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். இதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் சாவில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த மடாதிபதி...

இதற்கிடையே உப்பள்ளியில் பெஜாவர் மடாதிபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வி‌ஷம் கொடுத்து மடாதிபதியை கொல்லும் அளவிற்கு யாருக்கும் தைரியம் இல்லை. மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகள் கடந்த ஒரு வருடமாக சிறுநீரகம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அதன்காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

நான் இன்று(அதாவது நேற்று) இரவுக்குள் உடுப்பிக்கு சென்று மடாதிபதி இறுதிச்சடங்குகள் தொடர்பான பூஜைகளில் கலந்து கொள்வேன். சிரூர் மடத்திற்கு அடுத்த மடாதிபதி யார் என்பதை அந்த மடத்தின் நிர்வாகிகளே ஆலோசித்து முடிவு செய்வார்கள்.

இவ்வாறு பெஜாவர் மடாதிபதி கூறினார்.

விசாரணை நடத்தப்படும்

இந்த நிலையில் பெங்களூருவில் முதல்–மந்திரி குமாரசாமியும், துணை முதல்–மந்திரி பரமேஸ்வரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

சிரூர் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிகள் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவருடைய மரணத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மடாதிபதி சிறுவயதிலேயே இறந்திருக்கிறார். அவருடைய மரணம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு. அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அதனால் தேவைப்பட்டால் இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். மடாதிபதியின் மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விரைவில் முடிவு தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வி‌ஷம் கலக்கப்பட்டதா?

இதற்கிடையே மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அவினாஷ் ஷெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:–

மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி திடீரென ரத்த வாந்தி எடுத்ததாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறி அவரை எங்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு எங்களால் முடிந்த வரையில் சிறப்பாக சிகிச்சை அளித்தோம். இருப்பினும் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தபோது, அவருக்கு உயர் ரத்த அழுத்தம், இரைப்பையில் ரத்தக்கசிவு, மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சினைகள் இருந்தன. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டார். அவர் சாப்பிட்ட உணவில் வி‌ஷம்(நச்சுத்தன்மை) கலக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அவருடைய ரத்த மாதிரியை சேகரித்து சோதனைக்கு அனுப்பி உள்ளோம்.

போலீசுக்கு தெரிவித்துவிட்டோம்

மடாதிபதி மரணம் அடைந்ததும் இதுபற்றி நாங்கள் போலீசாருக்கு தெரிவித்து விட்டோம். அதன்பிறகே விதிமுறைகளை பின்பற்றி நாங்கள், பிரேத பரிசோதனையை செய்தோம்.

இவ்வாறு டாக்டர் அவினாஷ் ஷெட்டி கூறினார்.


Next Story